ஒற்றுமையுடன் நின்று ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டம்

பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலாநேற்று எம்ஜிஆரின் ராமாவரம் வீட்டுக்கு சென்று  அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் டிடிவி தினகரன்.படம்: பு.க.பிரவீன்
பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலாநேற்று எம்ஜிஆரின் ராமாவரம் வீட்டுக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் டிடிவி தினகரன்.படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதிமுகவை நிச்சயம் மீட்டு, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைப்போம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து டிடிவி தினகரன் கூறியதாவது:

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் வந்த சசிகலாவுக்கு இதுவரை கேள்விப்படாத அளவில் 23 மணி நேரத்துக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள், தாய்மார்கள், பெரியோர்கள், குழந்தைகள் ஆங்காங்கே நின்று உற்சாகமாக வரவேற்றனர். அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த வரவேற்பு இருந்தது.

எனது சித்தி என்ற முறையில் சசிகலாவை பார்த்துவிட்டு வந்தேன். எங்களது உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது.

ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டதும் அங்கு சசிகலாவை அழைத்துச் செல்வோம். மராமத்துப் பணிக்காக அதிமுக தலைமை அலுவலகத்தை மூடிவிட்டதாக சொன்னார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று என்னை தொடர்புகொண்டு சசிகலா உடல்நலம் குறித்து விசாரித்தார். சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விசாரித்ததை சொன்னால் அவர்களுக்கு பிரச்சினை வரும்.

இன்றைய நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் சசிகலா போட்டியிட முடியாவிட்டாலும், சட்டத்தில் அதற்கு வாய்ப்பு உள்ளது. நீதிமன்றத்தை அணுகினால் நல்ல தகவல் வரும். அதனால் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார் என நம்புகிறேன். நான் ஆர்.கே. நகர் உட்பட 2 தொகுதிகளில் போட்டியிடுவேன்.

அதிமுகவை மீட்டெடுக்கவும், ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கவும்தான் அமமுக தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கிய 2018 மார்ச் 15 முதல் இதை சொல்லி வருகிறேன். அதிமுக இணையுமா, இணையாதா என்று பதில் சொல்லும் அளவுக்கு எனக்கு அரசியல் ஞானம் கிடையாது. அதிமுகவை மீட்டெடுப்பதே எங்கள் இலக்கு. அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எப்போது நிறைவேறும் என்பது மக்கள் கையில் இருக்கிறது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பெங்களூருவில் தொடங்கி சென்னை வரை 330 கி.மீ. தூரத்துக்கு வழிநெடுக சசிகலாவுக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் லட்சியப் பாதையில் புத்தெழுச்சியோடு பயணிப்போம். தமிழகத்தில் தீயசக்தி கூட்டம் தலையெடுத்துவிடாத வகையில் ஒற்றுமையுடன் நின்று, வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை குவித்து ஜெயலலிதாவுக்கு சமர்ப்பிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in