

அரசின் விதிகளை மீறி வாகனங்களில் கால்நடைகளைக் கொண்டுசென்றால், பசு பாதுகாப்புப் படையினர் தடுத்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பார்கள் என மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் தெரிவித்தார்.
திருச்சி ஸ்ரீ ரங்கம் உத்தர வீதியில்செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
வாகனங்களில் கால்நடைகளை கொண்டுச் செல்லும்போது அரசின் விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்று போலீஸார், வட்டார போக்குவரத்துத் துறையினர், கால்நடைத் துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை.
எனவே, வாகனங்களில் மாடுகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகாமல் கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் பசு பாதுகாப்புப் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படையினர் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கண்காணித்து, விதிமீறல் இருந்தால் அந்த வாகனங்களைத் தடுத்து, அரசு அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார்கள்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார்கள். அதேவேளை, பசு பாதுகாப்புப் படை ஒருபோதும் சட்டத்தைக் கையில் எடுக்காது.
பசு பாதுகாப்புப் படையின் மாநிலத் தலைவராக இந்து எழுச்சிப் பேரவையின் சந்தோஷ்குமார், மாநிலச் செயலாளராக தமிழக இந்து மக்கள் முன்னணியின் தமிழ்ச்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாடுகள் மட்டுமின்றி ஆடுகள், கோழிகள் ஆகியவற்றை கொண்டுச் செல்லும் வாகனங்களையும் பசு பாதுகாப்புப் படை கண்காணிக்கும்.
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் நேரிட்டு உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. எனவே, சாலைகளில் கால்நடைகளை திரியவிடும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.