Last Updated : 01 Nov, 2015 01:41 PM

 

Published : 01 Nov 2015 01:41 PM
Last Updated : 01 Nov 2015 01:41 PM

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு எப்போது?

கோவையில் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டும், கடந்த 2 ஆண்டுகளாக திறப்பு விழா காணாமல் இழுபறி நிலையில் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ‘உங்கள் குரல்’ மூலம் இந்த மருத்துவமனை குறித்து தகவல் தெரிவித்திருந்தார். அவரை நேரில் சந்தித்தபோது அவர் கூறியதாவது:

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் அருகே உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை 1971-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் சார்பில் அனைத்து மாநிலங்களிலும் தொழிலாளர் நல ஈட்டுறுதி மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவையில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அதற்காக மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஏற்கெனவே இருந்த இஎஸ்ஐ மருத்துவ மனைகளை தொழிலாளர் நல ஈட்டுறுதி கழகம் ஏற்றது.

கோவையை பொறுத்தவரை ஏற்கெனவே மருத்துவமனை இருந்த வளாகத்திலேயே 32 ஏக்கர் நிலம் இருந்ததால், அதிலேயே கல்லூரிக்கான கட்டிடங்களும், பழுதுபட்டு நிற்கும் மருத்துவமைனை கட்டிடங்கள் புனரமைப்புப் பணிகளும் தொடங்கின. இப் பணிகள் 2013-ம் ஆண்டே முடிக்கப்பட்டுவிட்டன. கல்லூரி பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணிக்காக 15 பேருக்கு மேல் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தொழிலாளர் நல ஈட்டுறுதி கழகத்தை இந்த மருத்துவக் கல்லூரி நடத்த முடியாது, மாநில அரசே நடத்தட்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. மாநில அரசு இதை நடத்துவதற்கு, ரூ.500 கோடி வேண்டும், ஆண்டுதோறும் ரூ.180 கோடி செலவாகும் என்று திட்ட மதிப்பீடு செய்ததாக செய்திகள் வந்தன. ஆனால் இன்று வரை இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மாநில அரசு அல்லது மத்திய அரசு நடத்துகிறதா என்றே புரியவில்லை.

அதே நேரத்தில், மத்திய அரசு ஊதியத்தில் வேலை பார்க்கும் ஆர்வத்தில் வந்த மருத்துவத்துறை பேராசிரியர்களும், அலுவலர்களும், மாநில அரசின் கைக்கு இது போகப்போகிறது, சம்பளம் குறைவாக வரும் என்பதை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.

மருத்துவக் கல்லூரியின் நிலை இப்படி என்றால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதனுள் இயங்கி வரும் மருத்துவமனையும் குழப்பத்தில் உள்ளது. பழுதுபட்டிருந்த பழைய மூன்று மாடிக் கட்டிடங்கள் பல புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயார் நிலையில் இருந்தும், பூட்டிய நிலையிலேயே உள்ளது. கட்டிடங்களில் மொத்தம் 32 லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றிரண்டு மட்டும் இயங்குகிறது.

மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டும் முன்பே 500 படுக்கை வசதிகளுடன் முழுமையாக மருத்துவமனை இயங்கி வந்தது. அத்தனை படுக்கைகளும் எப்போதும் நிறைந்தே காணப்படும். தற்போது அவற்றில் 200 படுக்கைகளுக்கு நோயாளிகள் நிரம்புவதே கடினமாக உள்ளது.

முன்பு தினமும் 300 முதல் 400 வரை நோயாளிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்தது. அது தற்போது 300 முதல் 200 ஆக குறைந்துவிட்டது. அந்த அளவுக்கு குழப்பத்தினாலும், வசதிக் குறைவினாலும் அல்லல்படுகிறது மருத்துவமனை. கட்டிடங்களை திறக்கக்கோரி மருத்துவ அதிகாரிகளிடம் தொழிற்சங் கத்தினர் மனு கொடுக்கின்றனர். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் இப்படி வீணாகலாமா? தொழிற்சங்கத்தினர் முழு அக்கறையோடு போராடினால்தான் இதன் திறப்பு விழாவை காண முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவை இஎஸ்ஐ மருத்துவ அதிகாரிகள் கூறும்போது, ‘இஎஸ்ஐ கார்ப்பரேஷன், மருத்துவக் கல்லூரி கட்டிடங்களை மாநில அரசிடம் ஒப்படைக்கவில்லை. அதேசமயம், சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றே போதும் என்ற பேச்சும் அரசு தரப்பில் நடந்து வருவதாகத் தெரிகிறது. இதற்கு மேல் வேறு எந்த கருத்தும் கூற முடியாது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x