

சென்னையை சேர்ந்த இளம் கார் பந்தய வீரரும் வழக்கறிஞருமான சந்தீப் குமார், 2020 எல்ஜிபி ஃபார்முலா 4 நேஷனல் ரேசிங் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை கரி மோட்டார் வேகப்பாதையில் எல்ஜிபி ஃபார்முலா 4 பிரிவில், எஃப்.எம்.எஸ்.சி.ஐ. ஜே.கே.டயர் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் டார்க் டான் ரேசிங் அணிக்காக சந்தீப் குமார் கார் ஓட்டினார்.
இறுதிப் போட்டியில் சாம்பியன்ஷிப் முன்னோடி அஸ்வின் லேப்1-ல் மோதி பந்தயத்திலிருந்து வெளியேறினார். அதில் சந்தீப் காரும் சிறிது சேதமடைந்தது. சந்தீப் கடந்த கால நிகழ்வுகளை படிப்பினையாகக் கொண்டு எவ்வித தடுமாற்றமும் இன்றி செயல்பட்டார். எந்த விதமான தவறுகளையும் ஆபத்தான நகர்வுகளையும் எடுக்காமல் சீராக சென்று கொண்டே இருந்தார். நிதானமாகவும், இலக்கை நோக்கி சீரான முறையிலும் காரை இயக்கியதால் 5-வது இடத்தில் முடித்து, 2020 ஜே.கே.டயர் எல்ஜிபி எஃப்4 தேசிய கார் சாம்பியன்ஷிப்பை வென்றார்.
இதுகுறித்து சந்தீப் கூறும்போது, ``நல்ல வேகமும், தவறுகளை செய்வதைத தவிர்க்கும் திறமையும் இருந்தால் சாம்பியன்ஷிப்பை வெல்லும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று கணித்தேன். அதற்கு ஏற்ப நான் கடுமையாக பயிற்சி எடுத்துக்கொண்டேன்'' என்றார்.