

உத்திரமேரூர், சாலவாக்கம் அருகே உள்ளது எடமச்சி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சின்னமலையில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால வகையைச் சேர்ந்த கல்திட்டை, கல் வட்டங்கள் போன்ற ஈம சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன், ஆனந்த குமார் ஆகியோர் இணைந்து எடமச்சி கிராமத்தில் உள்ள சின்னமலையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கல்திட்டைகளை கண்டறிந்தனர்.
இந்த கல்திட்டைகள் பெருங்கற்கால பண்பாட்டை சார்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களின் ஒரு வகையாகும். இது பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும் அவற்றின் மீது சமநிலையில் தட்டையான ஒரு பலகை போன்ற ஒரு கல்லையும் வைத்திருக்கும் ஓர் அமைப்பாகும்.
இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் கூறியது:
பெருங்கற்கால மனிதர்களின் சுவடுகள் பெரும்பாலும் மலைகளை ஒட்டிய பகுதிகளிலும், மலைச்சரிவுகளிலுமே அதிகமாக காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் வேட்டையின் போதோ வயது மூப்பின் காரணமாகவோ நோய்வாய்பட்டோ இறக்க நேரிட்டால் இறந்தவர்களின் உடலை புதைத்து அந்த இடத்தில் அவர்களின் நினைவாகவும், அடையாளத்துக்காகவும் காட்டு விலங்குகள் உடலை சிதைக்காமல் இருக்கவும் பெரிய, பெரிய கற்களை வைத்து இது போன்ற ஈமச்சின்னத்தை அமைத்தனர். இதற்கு கல்திட்டை என்று பெயர். தற்போது அமையும் சமாதிகளுக்கும் இதுதான் தொடக்கம். இதேபோல் கல்வட்டங்களும் இங்கு காணப்படுகின்றன.
இதிலிருந்து இந்த ஊர் மிகப் பழமையான ஊர் என்பதும், இங்கு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்த்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. எனவே தமிழத் தொல்லியல் துறை உடனடியாக இந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு இங்குள்ள நினைவுச் சின்னங்களை அடையாளப்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்த தகவல்களை அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றார்.