

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 3,500 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் மாநிலப் பொருளாளர் என்.நாகஜோதி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக அரசின் சுகாதாரத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் 3,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்திய மருத்துவக் கவுன்சில் சட்ட விதிகளின்படி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிதாக நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்தபட்சம் 6 நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கி றோம்.
அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலும், மாலை 5 மணி முதல் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்திலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். தமிழகம் முழுவதும் இருந்து சுமார் ஆயிரம் ஒப்பந்த செவிலியர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு நாகஜோதி தெரிவித்தார்.
பேட்டியின் போது துணைத் தலைவர் ஆர்.மாரிமுத்து, இணைச் செயலாளர் ஆர்.சிந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.