

கணவரைக் கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மனைவிக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதால், அவருக்கு பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. கணவரைக் கொலை செய்த வழக்கில் திண்டுக்கல் 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த 2019-ல் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்த சுப்புலட்சுமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை 4 ஆண்டு சிறை தண்டனையாகக் குறைத்தது. மதுரை பெண்கள் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சுப்புலட்சுமி, தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில் சுப்புலட்சுமியை பரோலில் விடுதலை செய்யக் கோரி அவரது சகோதரி ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் அமர்வு விசாரித்தது.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், ''சுப்புலட்சுமி திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்கிறார். அவரை உடனடியாக மதுரை மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலரிடம் மதுரை சிறை நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும். அவர் மருத்துவ சிகிச்சைக்காக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், வல்லராமபுரத்தில் உள்ள மனுதாரரின் வீட்டில் தங்கியிருக்க வேண்டும்.
அப்போது சுப்புலட்சுமி மருத்துவ சிகிச்சை தவிர்த்து வேறு எங்கு செல்கிறார் என்பதைச் சேர்ந்தமரம் போலீஸார் கண்காணிக்க வேண்டும்.
நெல்லை மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலர் 10 நாளுக்கு ஒரு முறை மனுதாரர் வீட்டில் ஆய்வு செய்ய வேண்டும். பரோல் கேட்டு மனுதாரர் மீண்டும் அரசிடம் மனு கொடுக்க வேண்டும். அந்த மனு மீது அரசு 3 மாதத்தில் அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.
பின்னர் விசாரணையை பிப். 24க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.