Published : 09 Feb 2021 08:35 PM
Last Updated : 09 Feb 2021 08:35 PM

நவீன காலத்தில் பெட்டி வைத்து மனு வாங்கும் ஸ்டாலின்; 1100க்கு டயல் செய்தால் குறை தீர்ப்போம்: முதல்வர் பழனிசாமி பேச்சு 

சென்னை

இஸ்லாமியப் பெருமக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக முகமது ஜானை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். திமுக உட்பட எந்தக் கட்சியிலாவது தேர்ந்தெடுத்தார்களா? சிறுபான்மையினர் மக்கள் இதை எண்ணிப்பார்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (9.2.2021) ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதி, முத்துக்கடையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

“இது உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு. நீங்கள் என்ன கட்டளை இடுகின்றீர்களோ, அந்தக் கட்டளையை நிறைவேற்றுகின்ற பணி முதல்வர் பணி. ஆனால் ஸ்டாலின், நான் முதல்வர் ஆகிவிடுவேன் என்று சொல்லிக் கொண்டே இருகின்றார். அவர் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். முதல்வர் ஆக முடியாது. சிறுபான்மையினர் மக்களுக்கு அரணாகத் திகழ்வது அதிமுக அரசு. இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக திகழ்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. இங்கு சாதிச் சண்டை, மதச் சண்டை கிடையாது. இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு கொடுக்கின்ற அரசு, தமிழக அரசு.

நமது அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றித் தந்தது. பொதுமக்களின் வசதிக்காக புதியதாக ஒரு கோட்டம் மற்றும் மூன்று வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாகப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை கனிவுடன் ஏற்று நிறைவேற்றிய அரசு, தமிழக அரசு. மாவட்ட மக்களின் வசதிக்காக ரூ.118 கோடியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. சொன்னதைச் செய்து வருகின்றோம், சொல்லாததையும் செய்கின்ற அரசு இந்த அரசு. தேர்தல் நேரத்தில் ராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டத்தை உருவாக்வோம் என்று வாக்குறுதி கொடுக்கவில்லை.

மக்களின் நலனுக்காக இதைச் செய்தோம். தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 6 புதிய மாவட்டங்களை உருவாக்கிய அரசு எங்கள் அரசு. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த மாவட்டத்திற்கு 2 கல்லூரிகளை வழங்கி இருக்கின்றோம். இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம்.

இஸ்லாமியப் பெருமக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக முகமது ஜானை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். திமுக உட்பட எந்தக் கட்சியிலாவது தேர்ந்தெடுத்தார்களா? சிறுபான்மையினர் மக்கள் இதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அண்மையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பயிர் சேதத்தினைப் பார்வையிடச் சென்றபோது, நாகூர் தர்காவிற்கு வருமாறு இஸ்லாமிய சகோதரர்கள் என்னை அழைத்தார்கள். அப்பொழுது நாகூர் தர்காவில் உள்ள குளக்கரை சுற்றுச்சுவர் கனமழையால் சேதமடைந்துள்ளது. அதனைச் சீர்செய்து தரவேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். உடனடியாக தமிழக அரசு ரூ.4.50 கோடியில் குளக்கரை சுற்றுச்சுவர் சீர்செய்ய நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரமலான் நோன்பின்போது 3000க்கும் மேற்பட்ட பள்ளி வாசலுக்கு நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் 5,145 மெட்ரிக் டன் விலையில்லா அரிசி வழங்கும் அரசு இந்த அரசு. நாகூர் சந்தனக்கூடு திருவிழாவிற்கு சந்தனக் கட்டைகளை விலையில்லாமல் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

மாவட்ட ஹாஜிகளுக்கு ரூ.20,000 மதிப்பூதியம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். உலமாக்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.1,500லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கியது எங்களுடைய அரசு. ஹஜ் புனித யாத்திரை செல்ல மத்திய அரசு நிதியுதவியை ரத்து செய்தபோதுகூட எங்களுடைய அரசு தொடர்ந்து நிதியுதவி வழங்கியது. ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள ரூ.6 கோடி வழங்கிக் கொண்டிருந்தோம் அந்த நிதியுதவியை உயர்த்தித் தர கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையினை ஏற்று ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கிக் கொண்டிருக்கிறோம். ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் தங்கும் விடுதி கட்டித் தரக் கோரிக்கை விடுத்தார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று ரூ.15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் புனித யாத்திரை பயணிகள் தங்கும் விடுதி சென்னையில் கட்டப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதிக்கு நான் வருகை தரும்போது, குளங்கள் மற்றும் ஏரிகள் எல்லாம் நீரினால் நிரம்பி தழும்பிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் குடிமராமத்து திட்டம். இத்திட்டத்தின் மூலம் பெய்கின்ற மழை நீர் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் பாதுகாத்து குடிநீர் மற்றும் வேளாண் பணிக்காகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கவும், விபத்தில்லா தமிழகம் உருவாக்கவும் பாலங்கள் மற்றும் சாலைகள் தந்து கொண்டிருக்கின்றோம்.

ஆற்காடு நகருக்கு புறவழிச்சாலை, சோளிங்கர் நகருக்கு புறவழிச்சாலை போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே போக்குவரத்து விபத்தைக் குறைத்த முதல் மாநிலம் என்று தரைவழி அமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டுள்ளது.

புரவி மற்றும் நிவர் புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்னல்களைத் துடைக்க 16.43 லட்சம் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க் கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்து, நேற்றைய தினம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டாலின் அதில் ஒரு உள்நோக்கம் கற்பிக்கின்றார். விவசாயிகள்தான் கூட்டுறவு வங்கியில் பயிர்க் கடன் பெற்றுள்ளனர். ஆனால், ஸ்டாலினோ, நாங்கள் அதிமுகவினருக்குக் கொடுத்துவிட்டோம் என்று கூறிவருகிறார்.

அது எவ்வாறு கொடுக்க முடியும். ஏன், திமுகவினர் யாரும் பயிர்க் கடன் பெற்று வேளாண் பணி மேற்கொள்ளவில்லையா? காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எனக் கட்சி பார்த்தா கடன் வழங்குகின்றோம். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அதிகம் பயன்பெற்றது திமுகவினர்தான். அவர்கள்தான் அதிகம் தோட்டம் வைத்துள்ளனர். நமது மக்கள் ஏழை மக்கள். பச்சோந்தி நிறம் மாறக்கூடியது, அதை விட வேகமாக நிறம் மாறக்கூடியவர் ஸ்டாலின்.

ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பெட்டி ஒன்றை வைத்துக்கொள்கிறார். இன்னமும் சொல்கிறார் உங்கள் பிரச்சினைகளை எல்லாம் பெட்டியில் போடுங்கள், நான் பூட்டி வைத்துக் கொள்கிறேன் என்கிறார். தான் முதல்வர் ஆன பிறகு 100 நாட்களுக்குள் அதற்குத் தீர்வு காண்பதாகக் கூறுகிறார். 100 நாட்களில் தீர்வு எப்படிக் காண முடியும். இது என்ன படமா? பெட்டி என்றால் திமுகவினருக்குப் பிடிக்கும், அதனால் தான் போகும்போதே பெட்டி எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

இது நவீன உலகம், மக்களை ஏமாற்றமுடியாது ஸ்டாலின் அவர்களே. நீங்கள் எப்போதுமே அந்தப் பெட்டியின் பூட்டை திறக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் ஆட்சிக்கு வரப்போவது இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் "எனக்குப் பின்னால் இன்னும் நூறாண்டு காலம் ஆனாலும் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்" என்றார். இன்னும் நூறாண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருந்தால் நீங்கள் எப்போதும் திறக்க முடியாது.

இது ஒரு விஞ்ஞான உலகம், பெட்டியில் மனு போடுவது அந்தக் காலத்தோடு முடிந்துவிட்டது. இப்போது எல்லாம், அனைவர் கைகளிலும் செல்போன் உள்ளது. குடிநீர் பிரச்சினையா, சாலைப் பிரச்சினையா அதை முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்க்கும் மேலாண்மைத் திட்டத்தை இன்னும் ஒரு வார காலத்தில் தொடங்க இருக்கின்றோம். ஒரு போட்டோ போட்டால் போதும், அது நேரடியாக முதல்வருக்கு வரும். அதற்கு உதவி மையம் எண் 1100.

உங்களுடைய இல்லத்தில் இருந்தே பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x