

தஞ்சை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ள கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''திருவையாறு தாலுக்கா திருச்சோற்றுத் துறையில் ஓதவனேஸ்வரர் கோயிலும், தண்டாங்குறையில் கைலாசநாதர் கோயிலும் உள்ளன. இந்தக் கோயில்களுக்காக திருச்சோற்றுத்துறை, உப்புக்காச்சிபேட்டை, உத்தமநல்லூர், மாத்தூர், தண்டாங்குறை, செட்டிபத்து ஆகிய கிராமங்களில் சுமார் 130 ஏக்கர் நிலங்களை முன்னோர்கள் தானமாக வழங்கியுள்ளனர்.
இரு கோயில்களிலும் நித்திய பூஜைகள், மண்டகப்படி பூஜைகள் நடைபெறவும், வேத பாடசாலை, தர்மசத்திரத்துக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நோக்கத்தில் இந்த நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. தற்போது இந்த நிலங்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலங்களை மீட்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கவும், அந்தக் குழு கோயில் ஆவணங்களை ஆய்வு செய்து கோயில் நிலங்களின் தற்போதைய நிலையைக் கண்டுபிடித்து, ஆக்கிரமிப்பில் இருந்து நிலங்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாக அறநிலையத் துறை ஆணையர், நில நிர்வாகத் துறை ஆணையர், தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணயை மார்ச் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.