மதுரையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படுமா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படுமா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

மதுரையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்கக் கோரித் தாக்கலான மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''மதுரை மாநகரம் தற்போது திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை, புதுக்கோட்டை வரை விரிந்துள்ளது. சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக மதுரை உள்ளது. சென்னையைப் போல் மதுரையிலும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டெல்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 15 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்தப் போக்குவரத்து சேவையை தினமும் 20 லட்சம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னையிலும் மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இதேபோல் மதுரையிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளன. எனவே மதுரையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in