

வேலூர், பேரணாம்பட்டில் பொதுமக்கள் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய நபரைப் பிடித்து, அடித்து உதைத்த பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். அவரைச் சோதனையிட்டதில் துப்பாக்கியும், கத்திகளும், நீண்ட வாளும் இருந்ததால் அம்மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யும் முதல்வருக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேராணம்பட்டு என்கிற இடத்தின் அருகே இன்று காலை, காரை வேகமாகவும், தாறுமாறாகவும் ஓட்டிவந்த வந்த நபர் பொதுமக்கள் மீது மோதினார். இதில் சிலர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரைப் பிடித்த போலீஸார் அவரது காரைச் சோதனையிட்டபோது காரில் ஒரு துப்பாக்கி, இரண்டு கத்திகள், நீண்ட வாள், விதவிதமான நம்பர் பிளேட்டுகள், கர்நாடக ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட நம்பர் பிளேட் என இருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். இதையடுத்து அந்த நபரை ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து துப்பாக்கி, கத்திகள், வாள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர்.
அந்த நபரைத் தீவிரமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர் யார்? எதற்காக காரில் ஆயுதங்களுடன் வந்தார், அவருக்குக் கூட்டாளிகள் யாரும் உள்ளனரா? ஏதாவது சதிச் செயலில் ஈடுபடும் நோக்கத்தில் வந்தாரா எனத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கியுடன் அந்த நபர் பிடிபட்ட அதே மாவட்டத்தில்தான் முதல்வர் பழனிசாமி தீவிரத் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். வேலூர் மாவட்டம் கந்தனேரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதையடுத்து போலீஸார் முதல்வர் பாதுகாப்புப் பிரிவு போலீஸாருக்கும், உளவுப்பிரிவு போலீஸாருக்கும் ஆயுதங்களுடன் ஒரு நபர் சிக்கிய விவரத்தைத் தெரிவித்து வேண்டுமானால் பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளனர். முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் நடத்திவரும் மாவட்டத்தில் ஆயுதங்களுடன் நபர் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடிபட்ட நபரிடம் விசாரணை முடிந்தபிறகே அவர் யார், என்ன நோக்கத்திற்காக வந்தார் எனத் தெரியவரும். ஆனாலும், முதல்வர் பாதுகாப்பு முக்கியம் என்பதால் அவரது கோர்செல்லுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.