குடிமராமத்துப் பணி விவரங்களை இணையதளத்தில் வெளியிடுக: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

குடிமராமத்துப் பணி விவரங்களை இணையதளத்தில் வெளியிடுக: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அரசரடியைச் சேர்ந்த அன்புநிதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழகத்தில் நீர் நிலைகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது போதுமான அளவு மழை பெய்திருந்தாலும் பல நீர்நிலைகள் நிரம்பவில்லை. இதற்கு வரத்துக் கால்வாய்கள், கால்வாய்கள், கண்மாய்கள் முறையாகத் தூர்வாரப்படாததே காரணம். எனவே தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள், ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மாவட்ட இணையதளத்தில் வெளியிட வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள், ''நீர்நிலைகளில் நிறைவேற்றப்படும் குடிமராமத்துப் பணி என்பது ரகசியமாக நடைபெறுவதில்லை. ஒரு திட்டப் பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல் குறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே குடிமராமத்துப் பணிகள் குறித்த அனைத்து விவரங்களையும் அனைத்துப் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதில் குடிமராமத்துப் பணி நடைபெறும் இடம், பணி முடிவதற்கான கால அளவு, செலவுத் தொகை, இதுவரை நடைபெற்றுள்ள பணியின் அளவு உள்ளிட்ட முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், குடிமராமத்துப் பணிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படம், பணி நிறைவடைந்த பிறகு எடுத்த புகைப்படங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை 12 வாரத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in