

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் தமிழ், இந்தி திரைப்படம் மற்றும் 'குயின்' இணையதளத் தொடருக்குத் தடை விதிக்கக் கோரி தீபா தொடர்ந்த வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழில் 'தலைவி' என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல்.விஜய், இந்தியில் 'ஜெயா' என்ற பெயரில் ஹைதரபாத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன், இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். இதேபோல, நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் 'குயின்' என்ற இணையதளத் தொடரை இயக்கி கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார்.
இவற்றுக்குத் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்தி சுகுமார குரூப் அடங்கிய அமர்வில் இறுதி விசாரணை நடைபெற்றது.
அப்போது, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையைத் தாண்டி அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரின் குடும்பத்தார் மீதும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தீபா தரப்பில் வாதிடப்பட்டது.
இயக்குனர் விஜய் தரப்பில், ஆங்கிலத்தில் வெளியான புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகவும், தீபா ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.
கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இணையத் தொடர் 'குயின்' என்ற புத்தகத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.
அப்போது தீபா தரப்பில், 'தலைவி' படத்தை வெளியிடுவதற்கு முன்பாக தங்களுக்கு திரையிட்டுக் காட்ட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த படக்குழு தரப்பு, படத்தை தணிக்கை செய்ய சென்சார் போர்டு இருக்கும்போது, சூப்பர் சென்சார் ஏன் செய்ய வேண்டுமெனக் கேள்வி எழுப்பியது.
பின்னர், அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை விதிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.