

உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் இன்று நடைபெற்றது.
தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போல் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையாகக் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும், தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றி தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும், அரசுத் துறைகளில் பின்னடைவு காலிப் பணியிடங்களைக் கண்டறிந்து 3 மாதங்களில் அதை வெளிப்படையாக அறிவித்து உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் இன்று நடந்தது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் துணைத் தலைவர் சர்க்கரையப்பன் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் கண்ணன், ஒன்றியச் செயலாளர் முத்துமாலை, நகரத் தலைவர் அந்தோணிராஜ், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதில், கோவில்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மதியம் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதேபோல், விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்டப் பொருளாளர் புவிராஜ் தலைமையிலும், கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பசாமி தலைமையிலும் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது.