

அம்பத்தூர் தொழிற்பேட்டை முழுவதும் வெள்ளக்காடாக மாறியதால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
மொத்தம் 473 ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது பெய்துவரும் பலத்த மழை காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அங்கு வாகன உதிரிப்பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ள தாம்சன் கூறியதாவது:
அம்பத்தூர் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டதில் இருந்து இங்கு தொழிற்சாலைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் சாலைகள் செப்பனிடப்பட்டுள்ளன.
அதே சமயம் மழை, கழிவு நீர் செல்ல போதிய கால்வாய் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், கனமழைக்கு பெரும்பாலான தொழிற்சாலைகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெரும்பாலான சாலைகளில் மார்பளவுக்கு தண்ணீர் செல்கிறது. தொழிலாளர்கள் சாலையில் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர்.
தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் கனமழைக்கு இதுபோன்ற நிலையை நாங்கள் சந்தித்து வருகிறோம். வரும் காலங்களிலாவது இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு தாம்சன் கூறினார்.