பகுதிநேர ஆசிரியர்களைச் சிறப்பு ஆசிரியர்களாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

தொல். திருமாவளவன்: கோப்புப்படம்
தொல். திருமாவளவன்: கோப்புப்படம்
Updated on
1 min read

பகுதிநேர ஆசிரியர்களைச் சிறப்பு ஆசிரியர்களாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (பிப்.09) வெளியிட்ட அறிக்கை:

"கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியம் பெற்றுப் பணிபுரியும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த ஐந்து நாட்களாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

'அனைவருக்கும் கல்வி திட்டத்தின்' கீழ் கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் தற்போது 12 ஆயிரத்து 917 பேர் மட்டுமே பகுதி நேர ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். 10 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாததால் இவர்களுக்கு காலமுறை ஊதியம் கிடைக்கவில்லை. ரூ.7,700 மட்டுமே தொகுப்பு ஊதியமாகப் பெற்று வருகின்றனர். இதனால் இவர்களின் குடும்பங்கள் மிகுந்த இன்னல்களைச் சந்தித்து வருகின்றன.

இவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென பலமுறை கல்வித் துறைக்கும் தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2017-ம் ஆண்டு சட்டப்பேரவையில் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய மூன்று மாதங்களில் கமிட்டி அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்நாள் வரையிலும் கமிட்டியும் அமைக்கப்படவில்லை, அவர்களது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டுமே இவர்களுக்குப் பணி வழங்கப்படுகிறது. இளங்கலை, முதுகலை பட்டதாரி பகுதிநேர ஆசிரியர்களான இவர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படுகிற உரிமைகள் கூட வழங்கப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஆகவே, தமிழக முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும், அவர்களை உடனடியாக சிறப்பு ஆசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in