

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 135 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 121 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 110 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள தரை மற்றும் 6 தளங்கள் கொண்ட டவர் பிளாக் கட்டிடங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றிக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி வருவதோடு, நவீன மருத்துவக் கருவிகளையும் வழங்கி வருகின்றது.
அந்த வகையில், நகர்ப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகவை நிதி உதவியுடன் 1,634 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி கடந்த 28.7.2017 அன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், சென்னை-கீழ்ப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், சேலம், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஈரோடு, கடலூர் மற்றும் பெரியகுளம் ஆகிய 3 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், ஆவடி, சேலம் - அம்மாபேட்டை, திருப்பூர்-வேலம்பாளையம் மற்றும் திருநெல்வேலி-கண்டியப்பேரி ஆகிய இடங்களில் உள்ள 4 இரண்டாம் நிலை மருத்துவமனைகள் வலுப்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், சென்னை- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2,68,817 சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் 135 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள டவர் பிளாக் கட்டிடத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இக்கட்டிடத்தில், 12 அறுவை அரங்கங்கள் மற்றும் ஒரு ஹைப்ரிட் அறுவை அரங்கம், நரம்பியல், இதயம், எஸ்.ஜி.இ, சிறுநீரகம் / மாற்று அறுவை சிகிச்சை, எலும்பியல், பொது அறுவை சிகிச்சை, தீக்காயங்கள் மற்றும் நரம்பியலுக்கான ஹைப்ரிட் அறுவை அரங்கங்களைக் கொண்ட மேம்பட்ட அறுவை அரங்க வளாகம், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மயக்க தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவு, நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீக்காய தீவிர சிகிச்சைப் பிரிவு, இமேஜிங் மையம், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சி.எஸ்.எஸ்.டி சேவைகள், புனரமைப்பு அறுவை சிகிச்சை வார்டு, எண்டோஸ்கோபி சூட், அல்ட்ராசவுண்ட் ஆய்வகம் மற்றும் நச்சு சிகிச்சைப் பிரிவு, தீக்காயப் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, இருதய பிரிவு, நெப்ராலஜி பிரிவு, சிறுநீரகப் பிரிவு, டயாலிசிஸ் / சிஆர்ஆர்டி ஆகிய பிரிவுகள் செயல்படும். இக்கட்டிடத்தில் 410 படுக்கைகள் நிறுவப்படும்.
மதுரை, ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2,43,061 சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் 121 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள டவர் பிளாக் கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இக்கட்டிடத்தில், 22 அறுவை அரங்கங்கள் மற்றும் ஒரு ஹைப்ரிட் அறுவை அரங்கம், இருதயம், வாஸ்குலர், பொது அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை, எலும்பியல், கண் மருத்துவம் மற்றும் இருதய / வாஸ்குலருக்கான ஹைப்ரிடு அறுவை சிகிச்சை அரங்கம் கொண்ட மேம்பட்ட அறுவை அரங்க வளாகம், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்புப் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மயக்க தீவிர சிகிச்சைப் பிரிவு, இமேஜிங் சென்டர், சி.எஸ்.எஸ்.டி, அவசர சிகிச்சை துறை மற்றும் கேத் லேப் பிரிவு, இருதயவியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, இருதயம் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை ஆகிய வசதிகளுடன் செயல்படும். இந்த டவர் பிளாக்கில் 205 படுக்கைகள் நிறுவப்படும்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2,22,305 சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் 110 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள டவர் பிளாக் கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இக்கட்டிடத்தில், 9 அறுவை அரங்கங்கள் மற்றும் 2 ஹைப்ரிட் அறுவை அரங்கங்கள், பொது அறுவை சிகிச்சை, சி.டி.எஸ், இரைப்பை குடல், எலும்பியல், தீக்காயம் மற்றும் சி.டி.எஸ் / வாஸ்குலர், நியூராலஜிக்கான ஹைப்ரிட் அறுவை அரங்க மையம் கொண்ட மேம்பட்ட அறுவை அரங்க வளாகம், தீவிர சிகிச்சைப் பிரிவு, சர்ஜிகல் தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மயக்க மருந்து பராமரிப்பு பிரிவு மற்றும் ஸ்டெப்-டவுன் தீவிர சிகிச்சைப் பிரிவு, இமேஜிங் மையம், அவசர சிகிச்சைப் பிரிவு, சி.எஸ்.எஸ்.டி மற்றும் ஆய்வகம், மருத்துவ இரைப்பை குடல், சர்ஜிக்கல் இரைப்பை குடல் மற்றும் சி.டி.எஸ் போன்ற புறநோயாளிகள் பிரிவுகள், எண்டோஸ்கோபி சூட், பொது வார்டுகள், தீக்காயப் பிரிவு மற்றும் மருத்துவ இரைப்பை குடல் வார்டுகள் ஆகிய பிரிவுகள் செயல்படும். இந்த கட்டிடத்தில் 232 படுக்கைகள் நிறுவப்படும்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 5 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள 48 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு, நச்சு முறிவு சிகிச்சை மையம், கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்புப் பிரிவு ஆகிய பிரிவுகள், ராமாநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், 30 படுக்கைகள் கொண்ட வார்டு, ஆய்வகம், ரத்த சுத்திகரிப்புப் பிரிவு, என மொத்தம் 10 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக் கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்ட இயக்குநர் ஏ. சிவஞானம், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர். நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் குருநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.