Published : 09 Feb 2021 01:19 PM
Last Updated : 09 Feb 2021 01:19 PM

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடமில்லையா? - கி.வீரமணி கேள்வி

கி.வீரமணி: கோப்புப்படம்

சென்னை

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடமில்லையா என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (பிப். 09) வெளியிட்ட அறிக்கை:

"அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய சட்ட கர்த்தாக்களும், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களும் ஆழமாக விவாதித்தே பன் மதம், பன் மொழி, பல கலாச்சாரம், பல்வகை நாகரிகம், உணவு மற்றும் பழக்கவழக்கங்களின் பன்முகத்தன்மையை மனதிற்கொண்டே கல்வியை மாநிலப் பட்டியலில் வைத்தார்கள்.

கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். 1976 இல் நெருக்கடி நிலை காலத்தில் வெளிச்சத்திற்கு வராமலேயே, கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். அது இன்றுவரை தொடருவதோடு, மத்தியில் ஆளும் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சியில், அறிவிப்பும், ஆணையும், திருத்தமும் செய்யப்படாமலேயே, கல்வி மத்திய அரசு பட்டியலில் கொண்டு செல்லப்பட்ட கொடுமை ஏற்பட்டுள்ளது!
மாநில மக்களின் மொழி உரிமைதான் முதல் பலியாகும் கொடுமை!

பற்பல நாடுகளிலும் 10 கோடி மக்களின் தாய்மொழி - ஆட்சி மொழி - தமிழ்!

'ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைவதுபோல' தமிழ்நாட்டில் நுழைந்த மத்திய கல்வி போர்டின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டில் நுழைந்து, தமிழ் மண்ணில் நிலைப்பட்டுள்ள நிலையில், சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளுக்கு மட்டுமே அப்பள்ளிகளில் அதிமுக்கியத்துவம் தருவதோடு, தமிழ்ப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்குரிய வசதியைச் செய்து தராமல் கைவிரிப்பது நியாயந்தானா? இது 'தமிழ்நாடு' என்ற நினைப்பே மறந்துவிட்டதா? சமஸ்கிருதம் போல் 130 கோடி மக்களில் 26 ஆயிரம் பேர் பேசும் மொழியா தமிழ்?

உலகம் முழுவதும் உள்ள பற்பல நாடுகளிலும் 10 கோடி மக்களது தாய்மொழியாக, ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள மொழி செம்மொழி நம் தமிழ் மொழி அல்லவா? இதற்கு வாய்ப்புக் கதவுகளை மூடுவது அதுவும் தமிழ் மண்ணிலேயே என்றால், நம் ரத்தம் கொதிக்கவில்லையா?

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிகளில் தமிழுக்கு இடம் இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை!

1938-லேயே இந்தியை ஆச்சாரியார் ஆட்சி கட்டாய பாடமாக்கிய நேரத்தில், 'தமிழ் வாழ்க, இந்தி ஒழிக' என்ற குரல் கொடுத்த 10 ஆயிரம் பேர் கர்ப்பிணித் தாய்மார்கள் உள்பட சிறைக்குப் போய் தண்டனை அனுபவித்து, இன்று தமிழ்நாட்டு அரசின் கொள்கைத் திட்டமாக 50 ஆண்டுகளாக தமிழ், ஆங்கிலம் - இருமொழிக் கொள்கை ஆட்சியில் செயல்பட்டு வரும் மண்ணில், தமிழுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில் இடம் இல்லை என்று கூறுவது கொடுமையிலும் கொடுமையல்லவா?

திராவிடர் ஆட்சி 1967 இல் ஏற்படுவதற்கும் மூல காரணம் மொழிப் போராட்டம் அல்லவா? அதை மத்திய ஆட்சியாளர்கள் மறந்துவிடலாமா?

தமிழ்நாட்டுத் தமிழர்கள் - திராவிடர்கள் - இன உணர்வுடனும் தங்களது தனி அடையாளத்தை இழந்துவிடக் கூடாதவர்களாகவும் இருக்க வேண்டாமா?

இந்தி பேசும் மாநிலங்களில் இந்திக்கு இடமில்லை என்றால் பொறுத்துக் கொள்வார்களா?

தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்றுதான் மத்திய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நடத்த முடியும் என்று இருந்த 'தடையில்லா சான்றினை' (No objection Certificate) கூட மத்திய அரசு நீதிமன்றம் மூலம் நீக்கியதன் விளைவு, தமிழுக்கே கதவடைக்கும் கொடுமை அதுவும் தமிழ் மண்ணிலேயே நீடிக்கும் கொடுமை இருக்கிறது!

உத்தரப்பிரதேசத்துப் பள்ளிகளில் இந்திக்கு இடமில்லை என்றால், அவர்கள் பொறுத்துக் கொள்வார்களா?
இதுபற்றியெல்லாம் தமிழ்நாடு அரசு கவனம்செலுத்தாமல், அடிமைச் சாசனத்தில் கையெழுத்திட்டவர்களைப்போல, கண்டும் காணாததுபோல், தமிழ்மொழி புறக்கணிப்பை அலட்சியமாக எடுத்துக் கொள்வது ஏற்கத்தக்கதா?

நிதிநிலை அறிக்கையில் திருக்குறளை மேற்கோள்காட்டினால் போதுமா? தமிழ், தமிழர் என்று நெக்குருகப் பேசுவது ஒருபுறம், மறுபுறம் மத்திய கல்விக் குழுமம் நடத்தும் பள்ளிகளில் தமிழுக்கு கதவடைப்பதும் ஏற்கத்தக்கதா?

தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தங்களது மொழி உரிமைக் கொள்கையைப் பாதுகாக்க முன்வர வேண்டும். உதவாதினி தாமதம் உடனே விழி தமிழக அரசே!".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x