

நாட்டில் என்ன நடக்கிறது என்றே ஸ்டாலினுக்கு தெரியவில்லை என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதல்வர் பழனிசாமி மாவட்டந்தோறும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கைனூரில் முதல்வர் பழனிசாமி இன்று (பிப். 9) திறந்த வேனில் இருந்தபடி பிரச்சாரம் செய்தார்.
அவர் பேசும்போது, "தமிழகத்தில் ஏழை கிராமப்புற மாணவர்கள் கல்வி பெறுவதற்காக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் அதிக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொண்டு வந்து கல்வித்தரத்தை உயர்த்தி உள்ளோம்.
வேலூர் மாவட்டம் பெரிதாக இருப்பதால் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மாவட்டத்தையும் பிரித்துள்ளோம். ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தை உருவாக்கியது நாங்கள்தான். மக்களுக்குத் தேவையான நன்மைகளை செய்யும் அரசுதான் இது.
தமிழகத்தில் கிராமப்புற, நகர்ப்புறங்களில் வசிக்கும் அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தமிழக அரசு கூடுதலாக ரூ.70 ஆயிரம் அதிகம் கொடுத்து வீடு கட்டிக் கொடுக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தினமும் விளம்பரம் செய்கிறார் என்று ஸ்டாலின் கூறி வருகிார். நாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் விளம்பரம் கொடுக்கிறோம்.
ஸ்டாலின் கூட்டத்தில் வைத்த பெட்டியில் மனுக்களை போட வேண்டுமாம். அந்த பொட்டியை பூட்டி சீல் வைக்கிறார்கள். நீங்கள் எப்போது முதல்வராவது, அந்த பொட்டியை உடைப்பது. நாட்டில் என்ன நடக்கிறது என்றே ஸ்டாலினுக்கு தெரியவில்லை. தமிழகம் முழுவதும் முதல்வரின் குறைதீர்வு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதுவரை 9.75 லட்சம் மனுக்களை வாங்கி இருக்கிறோம். இதில், 5.25 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது ஸ்டாலினுக்கு தெரிய வாய்ப்பில்லை. வருவாய் கிராமங்கள் அளவில் கோரிக்கை மனு பெறப்படுகிறது. அந்த மனுக்களுக்கு ரசீது கொடுக்கப்படுகிறது. ஆனால், ஸ்டாலின் கொடுக்கின்ற ரசீது செல்லாது.
மக்களை இதுவரை சந்திக்காத ஸ்டாலின், இப்போதுதான் பார்க்கிறார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 லட்சம் பேருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்து இதுவரை 2.84 லட்சம் பேருக்கு வாகனம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 41 சதவீதம் மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்ததன் மூலம் இன்று 435 பேர் மருத்துவம் படிக்கின்றனர்.
வெயில், மழை என்று உழைக்கும் விவசாயிகள் 16 லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் வார்த்த அரசு அதிமுக அரசு. விவசாய கடன் ரத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 10 முதல் 15 நாட்களில் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு இது. தமிழ்நாடு முழுவதும் 95 சதவிகிதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.