சசிகலா உடல் நலன்; ரஜினி விசாரித்தார்: டிடிவி தினகரன் பேட்டி

சசிகலா உடல் நலன்; ரஜினி விசாரித்தார்: டிடிவி தினகரன் பேட்டி
Updated on
1 min read

4 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் தொண்டர்கள் வரவேற்புக்கிடையே சசிகலா இன்று காலை சென்னை வந்தார். அவர் வருகை குறித்து பேட்டி அளித்த டிடிவி தினகரன், சசிகலா உடல் நலன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்ததாகத் தெரிவித்தார்.

பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிந்து சென்னை திரும்பினார் சசிகலா. அவர் நேற்று காலை 8 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்டார். வழி நெடுக அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக கொடியைக் கட்டிச்செல்லக் கூடாது என சசிகலாவுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஓசூர் எல்லை அருகே வந்தபோது பிராடோ காரில் கொடி கட்டியிருந்ததை போலீஸார் அகற்றச் சொன்னதால் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கியின் காரில் ஏறிப் பயணித்தார். வழி நெடுக அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டதால் மிகத் தாமதமாக 23 மணி நேரத்திற்குப் பின் சென்னை திரும்பினார்.

சசிகலா சென்னை திரும்பியபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், சசிகலா வருகை குறித்தும் வழி நெடுக தொண்டர்கள், பொதுமக்கள் வரவேற்பு கொடுத்ததையும் தெரிவித்த அவர், சசிகலா உடல் நலன் குறித்துப் பல்வேறு தரப்பினர் நலம் விசாரித்தார்கள் என்று தெரிவித்தார்.

எனது இனிய நண்பர் ரஜினிகாந்த் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சசிகலா உடல் நலன் குறித்துக் கேட்டறிந்தார் என்று தினகரன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இன்னும் பலர் நலம் விசாரித்தார்கள். ஒரு அமைச்சரும், எம்எல்ஏவும் நலம் விசாரித்தார்கள். அவர்கள் பெயரைச் சொன்னால் சங்கடம். அதே நேரம் ரஜினிகாந்த் எனது நண்பர். அவர் பெயரைச் சொல்லலாம் தவறில்லை என்று தினகரன் குறிப்பிட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தலைவர்களுடன் நட்பு பேணுபவர். மறைந்த தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டெல்லி தலைவர்கள் என அனைவருடன் நட்பைப் பேணுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in