

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரும், அதிமுக தேர்தல் வெற்றிக்காக தனது கைவிரல்கள் மூன்றை வெட்டிக் கொண்டவருமான ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு ரத்தினம், சசிகலா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டியுடன் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
சேலம் மாவட்ட காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் ரத்தினம். ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றி பெற கோயிலுக்குச் சென்று தனது கையின் 3 விரல்களை வெட்டிக் கொண்டார். தற்போது, பணி ஓய்வு பெற்றுள்ள ரத்தினம் நேற்று சசிகலா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே எம்ஜிஆர் வேடம் அணிந்து கையில் சசிகலா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுவரொட்டியுடன் நீண்ட நேரம் நின்று மக்களின் கவனத்தை ஈர்த்தார்.