Published : 09 Feb 2021 08:19 AM
Last Updated : 09 Feb 2021 08:19 AM

கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடரும் இழுபறி: தனித்து போட்டியிடவும் தயாராக இருக்க பிரேமலதா உத்தரவு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி இன்னும் இறுதியாகததால், அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, அனைத்து தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமித்து, தனித்து போட்டியிடும் வகையில் தயாராக இருக்க வேண்டுமென கட்சியின் பொருளாளர் பிரேமலதா உத்தரவிட்டுள்ளார்.

தேமுதிக 2006ம் ஆண்டு முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. மொத்தம் 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 8.38 சதவீத வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மட்டுமே வென்றார். 2009ம் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10.3 சதவீத வாக்குகளை பெற்றது. பின்னர், 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்டது.

இதில், 29 இடங்களில் வெற்றி பெற்று தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. 104 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போனது. 2019ம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை. தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2.19 ஆக குறைந்திருப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் வரும் தேர்தலை தேமுதிக எடுக்கு முடிவுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், அதிமுக - தேமுதிக கூட்டணி தொடர்பாக இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் இருக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தொடர நினைக்கும் தேமுதிக 41 இடங்களை கேட்டுள்ளது. ஆனால், அதிமுக தரப்பில் 15 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க சம்மதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த கூட்டணி தொடருமா? என தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், சசிகலா வருகைக்கு பிறகு அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்பதால், அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் அமமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கூட்டணி மாறுகிறதா?

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘‘கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் வழங்கியது போல், இந்த முறையும் 41 தொகுதிகள் வழங்க வேண்டுமென கட்சி தலைமை தெரிவித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையை தாமதிக்காமல் உடனே தொடங்க வேண்டுமென தேமுதிக வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதுவரையில் அதிமுக தலைமை தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் இருப்பது தேமுதிகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை கொண்ட கட்சி தேமுதிக.

எனவே, தனியாக போட்டியிடவும் தயாராகும் வகையில் 234 தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சசிகலா வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். அதிமுகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாத நிலையில், தேமுதிக தனித்து போட்டியிடுவது அல்லது அமமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இருப்பினும், அடுத்த 2 வாரங்களில் தேமுதிக பொதுக்குழு கூட்டம் கூடும் என்பதால், அதில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x