Published : 09 Feb 2021 08:09 AM
Last Updated : 09 Feb 2021 08:09 AM

‘அழகிரி விஷயத்தில் கருணாநிதியே ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார்’- மதுரையில் திமுக எம்பி கனிமொழி சூசகம்

மதுரை மேற்குத் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி. ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் மூதாட்டி ஒருவரிடம் நலம் விசாரித்து குறைகளைக் கேட்டறிந்தார்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மத்திய முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி தொடர்பாக கருணாநிதியே ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். அதைத்தாண்டி யாரும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை என திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி கூறினார்.

மதுரை மேற்குத் தொகுதியில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி. சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு சமூகத்தினர், விவசாயிகள் அப்பளத் தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் கலந்துரையாடினார். தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியது: மதுரையில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் மக்களிடையே மாற்றத்துக்கான எழுச்சியைக் கண்கூடாகக் காண முடிகிறது.

மதுரையில் எந்த வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை. டிவிஎஸ் நகர், பழங்காநத்தம் இடையேயான பாலத்தைப் பார்க்கும்போது மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் தொடர்பாக வழக்கு இருப்பதால்தான் பணியை முடிக்க முடியவில்லை என முதல்வரே சட்டப்பேரவையில் தவறான தகவல் அளித்துள்ளார். விசாரித்தபோது அப்படி எந்த வழக்கும் இல்லை என தெரியவந்துள்ளது.

மதுரைக்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டுவர அடிக்கல் நாட்டினர். அதையும் 3 மாதத்தில் செயல் படுத்தமாட்டார்கள். வைகை ஆற்றை தேம்ஸ் நதியாக மாற்றுவேன், மேற்குத் தொகுதியை சிட்னியாக மாற்றுவேன் என்றார் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. ஆனால், வைகையில் நுரையும், சாயக்கழிவும்தான் கலக்கிறது. அவர் அமைச்சராகச் செயல்படுவதைவிட விஞ்ஞானியாகப் பணியாற்ற வேண்டும் எனக் கருதுவதால் அவரால் எந்தப் பணியையும் செய்ய முடியாது.

இத்தொகுதியில் ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் அதைப் பார்வையிடத் தயாராக உள்ளேன். மதுரை மட்டுமல்ல, தென் மாவட்டங்களில் எந்தத் தொழிற்கூடமும் வராததால் வளர்ச்சியைக் காணமுடியவில்லை. செய்யாததைச் செய்வதாகக்கூறி வாக்குக் கேட்கின்றனர்.

அம்மா என்றனர்..

தமிழகத்துக்கு எந்த முதலீடும் வரவில்லை. வேலை வாய்ப்பும் உருவாக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் திமுக செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்போம். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அறிவித்த எந்தத் திட்டத்தையும் முடித்துத் தரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா எங்கள் அம்மா என்றனர். இப்போது டெல்லியிலிருந்து என்ன சொல்கிறார்களோ அதைச் செய்கின்றனர். தரக்குறைவான விமர்சனத்தை வைக்கின்றனர்.

அதிமுக.தான் பாஜக.வின் `பி' டீமாக இயங்குகிறது. திமுக.வுக்கு எந்த `பி' டீமும் தேவையில்லை. நாங்கள் நேரடியாக அரசியல் செய்யத் தெரிந்தவர்கள். திமுக.வில் தற்போதுள்ள கூட்டணி தொடரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க.அழகிரி தொடர்பாக கருணாநிதியே ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். அதைத்தாண்டி யாரும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அவசியம் ஏற்பட்டால் ஸ்டாலின் எடுப்பார். மக்களிடம் ஸ்டாலின் மனுக்களைப் பெறத் தொடங்கிய பின்னரே போன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என முதல்வர் அறிவிக்கிறார்.

சுய உதவிக்குழு, நியாயவிலைக் கடைகள் செயல்பாடு என பல்வேறு விசயங்களில் தற்போதைய ஆட்சி மீது பெண்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுகவில் தேர்தல் அறிக்கையும், ஸ்டாலினும் கதாநாயகர்களாக இருப்பர். இவ்வாறு அவர் கூறினார். நேற்றிரவு ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கனிமொழி பேசினார். இன்றும் மதுரையில் சுற்றுப்பயணத்தைத் தொடர்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x