

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சசிகலா 4 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சென்னை திரும்பினார். அவருக்கு வழிநெடுக அமமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. கடந்த 27-ம் தேதி அவரது தண்டனை காலம் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும், கரோனா தொற்றுக்காக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
ஜன.31-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா பெங்களூரு தேவஹள்ளியில் சொகுசு விடுதியில் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருந்தார்.
சசிகலா கடந்த 4 ஆண்டுகளில் இருமுறை பரோலில் தமிழகம் வந்திருந்தாலும், வழக்கில் இருந்து விடுதலையாகி முதல் முறையாக தமிழகம் திரும்புவதால் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சசிகலா தங்கியிருந்த சொகுசு விடுதியில் இருந்து கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை அமமுக செயலாளர் ஷிமோகா சம்பத் சார்பில் 50-க்கும் மேற்பட்ட பேனர்களை வைத்திருந்தார். இதில் தமிழ் எழுத்துகள் இடம்பெற்றிருந்ததால் ஆத்திரம் அடைந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் நேற்று முன் தினம் இரவு பேனர்களையும், போஸ்டர்களையும் கிழித்து எறிந்தனர்.
விடுதியில் சிறப்பு பூஜை
திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால் சசிகலா காலை 6 மணிக்கே அர்ச்சகர்களை விடுதிக்கு அழைத்துவந்து சிறப்பு பூஜை செய்தார். பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்தூவி வணங்கிய சசிகலா 7.15 மணியளவில் நல்ல நேரத்தில் தனது பங்களாவில் இருந்து புறப்பட்டார். உறவினர்கள் டிடிவி.தினகரன், வெங்கடேஷ், விவேக், ஜெய் ஆனந்த் உள்ளிட்டோர் தனித்தனி வாகனங்களில் அவருக்கு பின்னால் அணிவகுத்தனர். பெங்களூருவில் அமமுகவினர் சசிகலாவின் வாகனத்துக்கு ஆரத்தி எடுத்து பூசணிக்காய் உடைத்து மேளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.
சசிகலாவுக்கு பின்னால் 6 கார்கள் மட்டுமே செல்ல பெங்களூரு போலீஸார் அனுமதித்திருந்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட கார்கள் சென்றதால் பெங்களூரு விமான நிலையசாலை, ஓசூர் சாலை ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூரு போலீஸார் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை சசிகலாவுக்கு முழு பாதுகாப்பு அளித்தனர்.
எல்லையில் தடுத்து நிறுத்தம்
தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடிக்கு காலை 10.15 மணிக்கு வந்தார். அவருக்கு அமமுகவினர் மலர்கள் தூவியும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு அளித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் சசிகலா வாகனத்தை தடுத்து நிறுத்தினர். கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சக்திவேல், அதிமுக கொடியை காரில் இருந்து அகற்ற வேண்டும். சசிகலா காரை பின்தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே உடன் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அடங்கிய நோட்
டீஸ் வழங்கினார். இதற்கு, சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சசிகலா, அதிமுகவில்தான் இருக்கிறார். அவருக்கு அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது.
மேலும், இதுதொடர்பானவழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது, என்றார். போலீஸார் அனுமதி மறுத்ததால் சுமார் 30 நிமிடங்கள் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. சூளகிரி அதிமுக நிர்வாகி இதைத் தொடர்ந்து சசிகலா, சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சம்பங்கியின் காரில் பயணம் மேற்கொண்டார். அந்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.
ஓசூர் நகருக்குவந்த சசிகலா, முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம்செய்தார். பின்னர் காலை 11.45 மணிக்கு ஓசூரை கடந்த சசிகலா, பேரண்டப்பள்ளி 2-வது சிப்காட்டில் உள்ள ஸ்ரீ மஹா பிரத்யங்கராதேவி கோயிலில் அம்மனை வழிபட்டார். அப்போது அவர் கழுத்தில் அதிமுக துண்டை மாலையாக அணிந்திருந்தார். சூளகிரி அருகே புலியரசிமேடு என்னும் இடத்தில் நீலகிரி மாவட்ட படுகர் இன மக்கள், பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு அளித்தனர்.
கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர். மேலும், கிருஷ்ணகிரி எஸ்பி பண்டிகங்காதர் தலைமையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.