அரசின் வருவாய் இனங்களை இ-சலான் மூலம் செலுத்தும் புதிய திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

அரசின் வருவாய் இனங்களை இ-சலான் மூலம் செலுத்தும் புதிய திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

நிதித்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தில் பொதுமக்கள், அரசுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அரசுக்குசெலுத்த வேண்டிய தொகைகளை கருவூலத்துக்கு இ-சலான் மூலம் செலுத்தும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசுப் பணிகள் சிறப்பாக நடைபெற நிதி மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருமைப்படுத்தி ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை கடந்த 2019 ஜன.10-ம் தேதி முதல்வர் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள கருவூலம் மற்றும் சம்பளக் கணக்கு அலுவலகங்களில் தற்போது 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்கின்றனர்.

மேலும், 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, பணி மாறுதல்கள், விடுப்பு போன்ற மற்ற விவரங்கள் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வருகிறது. இந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டமானது, டிஜிட்டல் ஒப்பம், பயோ மெட்ரிக் முறை மூலம் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாகும்.

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் அடுத்தகட்டமாக கருவூலத்தில்பெறப்படும் அரசின் வருவாய் இனங்களை மின் வரவாக (இ-ரெசிப்ட்), மின் செலுத்து சீட்டு (இ-சலான்) மூலம் நேரடியாக செலுத்தும் நடைமுறையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன்மூலம் பொதுமக்கள், அரசுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அரசுக்கு செலுத்த வேண்டிய வரவினங்களை, மின் வரவுகளாக 24 மணி நேரமும் தங்குதடையின்றி,‘www.karuvoola,.tn.gov.in’ என்ற இணையதளம் மூலம் செலுத்த முடியும்.

இந்த சேவைகளுக்காக பாரதஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய நான்கு வங்கிகளை திரட்டல் வங்கிகளாக தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பரோடாவங்கி இத்திட்டத்தில் ஒருங்கிணைப்பு பணிகளை முடித்துள்ள நிலையில், இவ்விரு வங்கிகள் வாயிலாக முதல்கட்டமாக அரசின் வருவாய்கள் பெறப்பட்டு, அரசின்ரிசர்வ் வங்கிக் கணக்கில் வரவுவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டமும் சிறிது காலத்துக்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், கருவூல கணக்கு ஆணையர் குமார் ஜயந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in