Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

தமிழகத்தில் அமலில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில், மத்திய அரசுவரும் பிப்.17-க்குள் பதிலளிக்கஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில்,‘தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இடஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எனவே தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். அத்துடன் இந்த வழக்கை மகாராஷ்டிரா மாநில இடஒதுக்கீடு தொடர்பான வழக்குடன் சேர்த்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தனர்.

இந்த வழக்கில் தமிழக அரசுதாக்கல் செய்திருந்த பதில்மனுவில், ‘‘ சாதி வாரியான கணக்கீடு என்பது தமிழகத்தில் மட்டுமே உள்ளது. அந்த சாதிவாரி கணக்கீட்டின் அடிப்படையில் தான் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த 69 சதவீதஇடஒதுக்கீட்டுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆனால் மகாராஷ்டிரா மாநில இடஒதுக்கீட்டுக்கு அந்த ஒப்புதல் பெறப்படவில்லை.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீட்டுக்கும், தமிழக இடஒதுக்கீட்டு முறைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.எனவே இந்த வழக்கை மகாராஷ்டிரா மாநில இடஒதுக்கீட்டு வழக்குடன் இணைத்து விசாரிக்கக்கூடாது. தமிழக அரசின் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை தனியாக விசாரிக்க வேண்டும், என அதில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபி்ல், ‘‘ இந்த விவகாரத்தில் இடஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கும் அதிகமாக தாண்டக்கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும், என வாதிட்டார்.

ஆனால் இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்து வாதிடப்பட்டது. 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அரசியல்சாசனப்பிரிவின் சட்டப்பாதுகாப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ளஇடஒதுக்கீடு என்பது தனித்துவமானது. அதை பிற வழக்குடன் சேர்த்து விசாரிக்கக்கூடாது, என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள் இதுகுறித்து மத்திய அரசு வரும் பிப்.17-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x