தமிழகத்தில் 10 மாத விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு; 9, 11-ம் வகுப்புக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன: சத்து மாத்திரை நாளை முதல் விநியோகம்

9, 11-ம் வகுப்புக்கும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. குரோம்பேட்டை அரசு பள்ளியில் மாணவிகள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.படங்கள்: எம்.முத்துகணேஷ்
9, 11-ம் வகுப்புக்கும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. குரோம்பேட்டை அரசு பள்ளியில் மாணவிகள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.படங்கள்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

தமிழகத்தில் 10 மாத கரோனா தொடர் விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நேற்று தொடங்கின. 19 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 2020 மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டன. கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த டிசம்பர் 7-ம் தேதி கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும்வகுப்புகள் தொடங்கின. இதர ஆண்டு மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள், பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. தனியார் பள்ளிகளில் கூடுதலாக இணையவழியிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த ஜனவரி 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் 9, 11-ம்வகுப்புகளும், அனைத்து கல்லூரிகளும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முகக் கவசத்துடன்..

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 9, 11-ம் வகுப்புகளுக்கு நேற்றுபள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ,மாணவிகள் முகக் கவசம் அணிந்து உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். நுழைவுவாயிலில் தெர்மல் ஸ்கேனரால் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகு, ஒவ்வொருவராக பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகள் கிருமிநாசினியை பயன்படுத்தி தங்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டனர். ஒரு வகுப்பறையில் 20 அல்லது 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கல்வி அதிகாரிகள் ஆய்வு

மாணவர்களின் வருகையை ஒட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறும்போது, ‘‘பள்ளிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் அனைவருக்கும் சத்து மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும். மாநிலம் முழுவதும்19 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத் துறை மூலமாக10-ம் தேதி முதல் 40 லட்சம்சத்து மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இடவசதியை கருத்தில் கொண்டு ஷிப்ட் முறையை பின்பற்றலாம் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்’’ என்றார்.

கல்லூரிகளில் உற்சாகம்

10 மாத கால இடைவெளிக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்படுவதால் அனைத்து மாணவ, மாணவிகளும், பேராசிரியர்களும் முகக் கவசம் அணிந்து உற்சாகமாக கல்லூரிகளுக்கு வந்ததை பரவலாக காண முடிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in