

புதுப்பட்டினத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையின் திருப்பங்களில் தொடர்ந்துவாகன விபத்துகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில்சாலையை கூடுதலாக அகலப்படுத்தி தொழில்நுட்பரீதியாக சீரமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள இளையனார் குப்பம் மற்றும் புதுப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள ஈசிஆர் சாலையில் தொடர்ந்து வாகன விபத்துகள் நடைபெற்று வந்தன. இதனால், வாகன விபத்துகளைத் தடுக்கும் வகையில் ரூ.23.85 கோடி மதிப்பீட்டில் 1.7 கி.மீ தொலைவுகொண்ட புறவழிச் சாலை அமைக்கப்பட்டது. வாகனப் போக்குவரத்துக்காக மேற்கண்ட சாலையை கணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்நிலையில், புதுப்பட்டினம் பழைய கிராம நிர்வாக அலுவலகம் எதிரே உள்ள புறவழிச் சாலையானது, பல்வேறு மார்க்கமாக வரும் சாலைகள் இணையும் பகுதியாக உள்ளது. இங்கு, தொழில்நுட்ப முறையில் சாலை அமைக்கப்படாததால் வாகனங்கள் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி வருகின்றன.
மேலும், குறிப்பிட்ட இப்பகுதியில் கல்பாக்கம் நகரியப் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் சாலையின்கீழ் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அவ்வப்போது கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதால், சாலை உள்வாங்கும் நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அப்பகுதியை வேகமாக கடக்கும் வாகனங்கள் பள்ளத்தால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி வருகின்றன.
அதனால், குறிப்பிட்ட பகுதியில் விபத்தை தடுக்கும் வகையில் புறவழிச் சாலையை கூடுதலாக அகலப்படுத்தியும் மற்றும் தொழில்நுட்ப முறையில் ஆய்வு செய்தும் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, உள்ளூர் மக்கள் கூறியதாவது: புறவழிச் சாலையில் குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து வாகன விபத்துகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்தால், முறையான நடவடிக்கை எடுக்காமல் வாகன ஓட்டிகளை குறை கூறுகின்றனர்.
மேலும், தேர்தல் பிரச்சாரம் உட்பட பல்வேறுபணிகளுக்காக தென் மாவட்டங்களுக்கு சென்ற முதல்வரின் கான்வாய் வாகனம் குறிப்பிட்ட சாலை பகுதியைக் கடந்து செல்லும்போது குறைவான வேகத்தில் இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் களப் பணியாளர்கள் கூறுகின்றனர். அதனால், புறவழிச் சாலையில் விபத்தை தடுப்பதற்காக உயர் அதிகாரிகள் குறிப்பிட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து தொழில்நுட்பரீதியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.