

11 தியேட்டர்களை வாங்க ரூ.1,000 கோடி எங்கிருந்து வந்தது என தி.மலையில் பேசிய மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நேற்று முன் தினம் இரவு கலந்துரையாடினார். அப்போது அவர்கள், "தமிழகத்தில் உள்ள புராதன கோயில்களில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்களின் வாரிசுகளை மட்டும் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அர்ச்சகர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையில் தங்களை நியமிக்க வேண்டும். அறங்காவலர் குழுவில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்" என்றனர்.
பணி பாதுகாப்பு
பின்னர் அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந் துரையாடிய ஸ்டாலினிடம், "ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். 6-வது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் பல்வேறு துறையினர் நடத்தி வரும் ஆய்வை ஓரே துறையின் ஆய்வாக மாற்ற வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போக்குவரத்து தொழிலாளர் களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும்" என்றனர்.
ரூ.1,000 கோடி வந்தது எப்படி?
திருவண்ணாமலை கடலை கடை சந்திப்பில் ஸ்டாலின் பேசும்போது, "பலரை மிரட்டி தியேட்டர் உள்ளிட்ட சொத்துகளை வாங்கி குவிக்கின்றனர். 11 தியேட்டர்களை வாங்க ரூ.1,000 கோடி எங்கிருந்து வந்தது. தமிழகத்தை காப்பாற்ற திமுக ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும்" என்றார்.
முன்னதாக, துரிஞ்சாபுரம் ஒன்றியம் பெரியகிளாம்பாடி கிராமத்தில் கலந்துரையாடிய ஸ்டாலினிடம் மக்கள் பேசும்போது, "கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, அதற்கான தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் மோட்டார் காயில் கட்ட ஐடிஐ முடித்தவரை பணி நியமனம் செய்ய வேண்டும். அதன்மூலம் 12 ஆயிரம் பேர் பயன்பெறு வார்கள்.
உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும். குருமன்ஸ் சமூகத்தினருக்கு பழங்குடியின சாதிச் சான்று வழங்க வேண்டும்" என்றனர்.