

`திருநெல்வேலி மாவட்டத்தில் அறுவடை தொடங்கியுள்ளதால் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்’ என்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி. பெரும்படையார் மனு அளித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்கூட்டம் ஆட்சியர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. அப்போது பெரும்படையார் அளித்த மனு விவரம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையால் அதிக இடங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பருவத்தை அடைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். குறிப்பாக, நாங்குநேரி, திருக்குறுங்குடி பகுதியில்தற்போது அறுவடை தொடங்கியிருப்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்கவேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் வழக்கம்போல் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாளையங்கோட்டை கோட்டூர்சாலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி ச.ராஜா என்ற அளித்த மனு:
90 சதவீதம் உடல் ஊனம் காரணமாக என்னால் கடினமான வேலை செய்ய இயலாது. எனது பெற்றோரின் ஓய்வூதியத்தை மட்டுமே வைத்து ஜீவனம் கழித்து வந்தோம். பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், ஆதரவற்ற மாற்றுத்திறனாளியான எனக்கு குடும்ப ஓய்வூதியத்தை அளிக்க வேண்டும்.