Published : 08 Feb 2021 10:13 PM
Last Updated : 08 Feb 2021 10:13 PM

தமிழினப் பெருமையைத் தடுக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழின பெருமையைத் தடுக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், என்.வைரம்பட்டி ஊராட்சி, காரைக்குடி – திருப்பத்தூர் சாலை அருகில் நடைபெற்ற, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

விழாவில் பேசிய அவர், "தமிழகத்தின் தமிழினத்தின் பெருமைக்கு அடையாளமாகச் சொல்லக் கூடிய கீழடி சிவகங்கை மாவட்டத்தில் தான் உள்ளது. சங்ககாலப் பெருமை பேசுகிறோம் என்றால் அவை அனைத்தும் உண்மை என்பதற்கான ஆதாரம் தான் இந்த கீழடி. நம்முடைய தமிழர் நாகரிகமும் பண்பாடும் 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தையது என்பதற்கான ஆதாரம் உள்ள மண் இந்த கீழடி மண்.

அந்தப் பெருமைகூட தமிழினத்துக்கு கிடைத்துவிடக் கூடாது என்று தடுத்த தமிழின விரோத அரசு தான் மத்திய பாஜக அரசு.

கீழடியை ஆய்வு செய்வதற்காக மத்திய தொல்லியல் துறையின் அதிகாரியான அமர்நாத் ராமகிருஷ்ணன் 2015-ஆம் ஆண்டு ஆய்வு நடத்தினார். அதற்கு அடுத்த ஆண்டும் ஆய்வு நடத்தினார்.

தமிழர்கள் எத்தகைய பெருமைக்குரிய இனமாக வாழ்ந்துள்ளார்கள், அனைவரும் நாகரிகத்தில் எவ்வளவு முன்னேறிய மக்களாக இருந்துள்ளார்கள் என்பதை அவர் கண்டுபிடித்தார். உடனே அமர்நாத் ராமகிருஷ்ணனை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள்.

அதன்பிறகு ஸ்ரீராமன் என்பவர் வந்தார். அவர் ஒப்புக்கு சில ஆய்வுகளைச் செய்துவிட்டு போனாரே தவிர அக்கறையோடு ஆய்வு செய்யவில்லை. அதன் பிறகு கீழடியையே மத்திய பாஜக அரசு மறந்துவிட்டது.

மறைக்கத் திட்டமிட்டது. இது மாதிரி வடமாநிலத்தில் ஓர் இடத்தை கண்டுபிடித்திருந்தால் பாஜக அரசு எத்தனை துள்ளு துள்ளும். ஆனால் தமிழ்நாடு என்பதால் புறக்கணித்தார்கள்.

2018-ஆம் ஆண்டுக்கு பிறகு மத்திய தொல்லியல் துறையே ஆய்வு நடத்தவில்லை. போராட்டம், வழக்குகள் என மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு கூட பாஜக அரசு இறங்கி வரவில்லை.

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செய்வோம் என்று தமிழக அரசு சொல்லிப் பார்த்தது. அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. வேறுவழியில்லாமல் இப்போது தமிழக அரசு மட்டும் ஆய்வு நடத்தி வருகிறது.

மத்தியத் தொல்லியல் துறை ஆய்வு நடத்தினால் தான் இந்த ஆய்வுக்கு இந்திய அங்கீகாரம், உலக மரியாதை கிடைக்கும். ஆனால் அதை பா.ஜ.க. அரசு செய்யவில்லை.

2015 - 2016 – 2017-ஆம் ஆண்டு காலத்தில் ஆய்வு செய்தார்களே அந்த அறிக்கையையாவது வெளியிட்டதா பா.ஜ.க. அரசு என்றால் அதுவும் இல்லை!

தமிழனின் பெருமை வெளியில் வரக் கூடாது - தமிழின் பெருமை உலகம் அறியக் கூடாது என்று நினைக்கக் கூடியவர்களுக்கு - தமிழர்களின் வாக்கு மட்டும் எதற்காக வேண்டும்? தமிழுக்கு பெருமை வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு தமிழனின் வாக்கு மட்டும் எதற்காக? என்பதை இக்கூட்டத்தின் வாயிலாகக் கேட்க விரும்புகிறேன்.

தமிழின் பெருமையை - தமிழர்களின் பெருமையை அழிக்க நினைப்பவர்களோடு தங்களது சுயநலத்துக்காக கூட்டுச் சேர்ந்துள்ளது அதிமுக.

கொள்ளையில் மட்டும் குறியாக இருக்கும் அ.தி.மு.க.வை வைத்து - தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க.

அதனால்தான் நேற்று முன் தினம் நான் பேசிய போது அரை அ.தி.மு.க. – அரை பா.ஜ.க. அரசு இது என்று சொன்னேன்.

பாஜக.,வை எதிர்க்கும் வல்லமை- மத்திய அரசிடம் வாதிட்டு தமிழகத்தின் உரிமைகளை மீட்கும் துணிச்சல் அதிமுக அரசுக்கு இல்லை. பழனிசாமிக்கு இல்லை. பன்னீர்செல்வத்துக்கு இல்லை.

இருவரும் தங்கள் வீரத்தை அடுத்தவருக்கு எதிராகக் காட்டிக் கொள்வதில் நேரத்தை செலவிட்டார்களே தவிர, தமிழகத்தின் உரிமைக்காக அந்த வீரத்தைக் காட்டவில்லை.

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் பாஜக.,வை இவர்கள் எதிர்க்கவில்லை. மாநிலம் கேட்கும் நிதியை தராத மத்திய அரசை இவர்கள் எதிர்க்கவில்லை. இயற்கை பேரிடர் கால நிதியைக் கூட தராத பிரதமரை இவர்கள் கேள்வி கேட்கவில்லை.

ஜிஎஸ்டி. வரி பாக்கியை வசூலிக்கும் துணிச்சல் இல்லை. இந்தித் திணிப்பை தடுக்கவில்லை. இப்படி எதையும் செய்யத் துணிச்சல் இல்லாத உங்களுக்கு எதற்காக முதல்வர் பதவி என்பது தான் என்னுடைய கேள்வி.

தமிழகத்தின் எந்த உரிமையையும் மீட்டுத் தர முடியாத உங்களுக்கு கோட்டை எதற்கு என்பது தான் என்னுடைய கேள்வி. இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல, நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி.

இத்தகைய முதல்வர் கடைசி நேரத்தில் பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறார். சட்டப்பேரவையில் பேசும் போது, உழவர்களே உலகத்துக்கு அச்சாணி போன்றவர்கள் என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் பேசி இருக்கிறார். இப்படிச் சொல்வதற்கு அவருக்கு கூச்சம் இல்லையா?

உழவர்களின் அச்சாணியை முறித்துவிட்டு, உழவர்களை எதற்காக புகழ்கிறீர்கள்?

மூன்று வேளாண் சட்டங்கள் வந்தால், விவசாயி வாழ்க்கையே பேச்சு மூச்சு இல்லாமல் நின்று போகும். அதனால் தான் கடும்குளிரில் இரண்டு மாதங்களைக் கடந்து தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய முதல்வர், விவசாயிகளைப் பற்றி பேசலாமா?

அவர்கள் விவசாயிகள் அல்ல, புரோக்கர்கள் என்று சொன்ன அரசியல் புரோக்கர் தான் இந்த பழனிசாமி. நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் விவசாய சட்டம் தோற்று போயிருக்கும். ஆதரித்து வாக்களித்து தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்ல, இந்திய விவசாயிகளுக்கே வாயில் விஷத்தை ஊற்றியிருக்கிறார்.

விவசாயி என்று போலி வேடம் போடும் அவர், திமுக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாது என்று சொல்லி இருக்கிறார். பதவிப்பிரமாணம் எடுத்த மேடையில் வைத்து 7000 கோடி கடனை ரத்து செய்த ஆட்சி தான் திமுக ஆட்சி. எனவே பழனிசாமி அவரது பொய்ப்புகார்களை வேறு எங்காவது போய் சொல்லட்டும்.

'நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத் தேர்தலில் சொன்னார் ஸ்டாலின். வெற்றி பெற்றார். ஆனால் வாக்குறுதியை மறந்துவிட்டார்' என்று சட்டப்பேரவையில் பேசி இருக்கிறார் பழனிசாமி.

முதலமைச்சருக்கு சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்று தெரியவில்லை. மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்ததா? இல்லை! பிறகு எப்படி வாக்குறுதியை நிறைவேற்றினாரா ஸ்டாலின் என்று கேட்க முடியும்? இப்படி கேட்பவருக்கு சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்று தான் கேட்க முடியும்.

பழனிசாமியிடம் நான் கேட்கும் கேள்வி - 2000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தீர்களே? அந்த 2000 மினி கிளினிக்குகளை தொடங்கிவிட்டீர்களா? அதற்கு எத்தனை டாக்டர்களை வேலைக்கு எடுத்தீர்கள்? எத்தனை நர்சுகளை வேலைக்கு எடுத்தீர்கள்? மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, இவை தற்காலிகமானவைதான் என்று சொன்னது ஏன்?

மருத்துவ முகாம் நடத்துவதை போல சும்மா ஒப்புக்கு ஒரு கட்டடத்தை பிடித்து பச்சை பெயிண்ட் அடித்துவிட்டால் அது மினி கிளினிக் ஆகிவிடுமா? இப்படி பழசுக்கு பெயிண்ட் அடிக்கும் ஆட்சி தான் அதிமுக ஆட்சி. புதிதாக எதையும் உருவாக்கவில்லை.

வாக்குறுதியை நிறைவேற்றுவது என்றால், பதவி ஏற்ற மேடையிலேயே கையெழுத்து போடுவதுதான் வாக்குறுதியை நிறைவேற்றுவது. பதவி முடியப் போவதற்கு முந்தைய மாதம் கையெழுத்து போடுவது அல்ல.

கூட்டுறவு கடனை ரத்து செய்வதாக சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை என்று மக்கள் கேட்பார்கள். மறியல் செய்வார்கள். என்பதால் இப்போது பழனிசாமி இதைச் செய்கிறாரே தவிர உண்மையாக மக்கள் மீதான அக்கறையில் இதனைச் செய்யவில்லை.

மக்களால் ஒதுப்பட்டு விட்டார் பழனிசாமி. சொந்தக் கட்சிக்காரர்களது மரியாதையைக் கூட இழந்துவிட்டார் பழனிசாமி. இந்த இழப்பை சரிக்கட்டுவதற்காக இது போன்ற நாடகங்களை நடத்துகிறார்.

நீட் தேர்வில் நாடகம்! ஏழு பேர் விடுதலையில் நாடகம்! விவசாயிகளிடம் நாடகம்! சிறுபான்மையினரிடம் நாடகம்!

இப்படி தொடர் நாடகங்களை மறைக்க கோடி கோடியாக அரசு பணத்தை செலவு செய்து விளம்பரம் கொடுத்து வருகிறார். கொள்ளையடித்த பணத்தில் விளம்பரம் செய்து கொள்ளட்டும். ஆனால் அரசு பணத்தை எதற்கு பயன்படுத்துகிறீர்கள்? மக்கள் வரிப்பணத்தில் எதற்காக பழனிசாமிக்கு ஏன் இத்தனை விளம்பரங்கள்? இப்படி விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு என்ன சாதனைகளைச் செய்துவிட்டார்?

எதுவுமே செய்யாதது தான் அவரது சாதனை! எதுவும் செய்யத் தெரிந்தால் தானே செய்வார்?

ஒரு ஆட்சியாளருக்கு மக்களைப் பற்றிய கவலை இருக்க வேண்டும். பொது நோக்கு இருக்க வேண்டும். எதிர்காலக் கனவுகள் இருக்க வேண்டும்.

மக்களைப் பற்றிய கவலையும் அவருக்கு கிடையாது. சசிகலா காலை பிடித்து பதவி வாங்கியவர்.

தனது நாற்காலியைப் பற்றி கவலைப்படவே நேரம் போதாத காரணத்தால் பொதுமக்களுக்காக சிந்திக்க நேரம் இல்லை. எந்தத் தகுதியும் இல்லாதவர் என்பதால் எதிர்காலக் கனவுகள் இல்லை.

இத்தகைய மண்குதிரையை நம்பி, அ.தி.மு.க.வால் இனி பயணம் செய்ய முடியாது. இவரை நம்பி அவர்களால் கட்சி நடத்த முடியாது. ஆட்சி நடத்தவும் முடியாது.

இந்த நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் தான் இந்த தேர்தல். கழக ஆட்சி, மக்கள் ஆட்சி, மக்கள் விரும்பும் ஆட்சி விரைவில் அமையும். அது உங்கள் ஆட்சியாக அமையும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x