Last Updated : 08 Feb, 2021 08:17 PM

 

Published : 08 Feb 2021 08:17 PM
Last Updated : 08 Feb 2021 08:17 PM

கடந்த 5 ஆண்டுகளில் கோவை குளங்களுக்கு வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை 62% சரிவு

கடந்த 5 ஆண்டுகளில் கோவை குளங்களுக்கு வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை 62 சதவீதம் சரிந்துள்ளது என்பது நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கோவையில் நொய்யல் ஆற்றின் வழித்தடங்களில் உள்ள நீர்நிலைகளும், குளங்களும் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. உக்குளம், கிருஷ்ணாம்பதி, செங்குளம், வெள்ளலூர் குளம், சிங்காநல்லூர் குளம், ஆச்சான்குளம் உள்ளிட்ட குளங்களில் உள்ள நீர்வாழ் பறவைகளை கண்டறிய ‘ஏசியன் வாட்டர்பேர்டு சென்சஸ்’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 28 குளங்களில் நடப்பாண்டுக்கான கணக்கெடுப்பு நடைபெற்றது.

கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டியைச் (சிஎன்எஸ்) சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். கணக்கெடுப்பின் முடிவில் கோவை குளங்கள், அதனை ஒட்டிய பகுதிகளில் 134 வகை பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 31 வகைப் பறவைகள் வலசை வரும் பறவைகள். கடந்த 5 ஆண்டுகளின் கணக்கெடுப்பை ஒப்பிடுகையில் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை 62 சதவீதம் அளவுக்குச் சரிந்துள்ளது.

சின்ன தோல் குருவி

இதுகுறித்து சிஎன்எஸ் தலைவர் செல்வராஜ், மூத்த உறுப்பினர் பாவேந்தன் ஆகியோர் கூறும்போது: ''கடந்த 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 2,592 வலசை வரும் பறவைகளும், 2018-ல் 2,127 வலசை பறவைகளும், 2019-ல் 1,846 வலசை பறவைகளும், 2020-ல் 1,380 வலசை பறவைகளும் தென்பட்டுள்ளன. ஆனால், நடப்பாண்டு கணக்கெடுப்பின்போது சுமார் 978 வலசை வரும் பறவைகளே தென்பட்டுள்ளன. குறிப்பாக வாத்து வகைகள், கரையோரம் இரை தேடும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

உக்குளத்தில் அதிகபட்சமாக 67 வகை பறவைகளும், ஆச்சான்குளம், உக்கடத்தில் 61 வகை பறவைகளும், செல்வாம்பதி குளத்தில் 60 வகையான பறவைகளும் தென்பட்டன. நொய்யல் வழித்தடத்தில் கீழ்நோக்கிச் செல்லச் செல்லக் குளங்களில் மாசு அதிகரித்து வருகிறது.

நீரின் தரம், ஆழம், உணவு, இருப்பிடம் ஆகியவற்றைப் பொறுத்தே பறவைகளின் வரத்து இருக்கும். இவையேதும் வலசை வரும் பறவைகளுக்குச் சாதகமாக இல்லாமல் போனதால் பறவைகளின் வரத்து குறைந்துள்ளது. எனவே, வலசை பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழல் ஏற்படுத்துவது அவசியம்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x