Published : 08 Feb 2021 08:47 PM
Last Updated : 08 Feb 2021 08:47 PM

மதுரையில் 10 ஆண்டுகளாக எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாத அதிமுக: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

மதுரை

மதுரையில் 10 ஆண்டுகளாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சியை மக்களிடம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி கூறினார்.

மதுரையில் இன்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின், மேற்கு தொகுதியில் பல்வேறு பகுதிகளில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பல்வேறு சமூகத்தினர், விவசாயிகள் அப்பளத் தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் கலந்துரையாடினார். டிவிஎஸ் நகர்-பழங்காநத்தம் இடையே உள்ள பாலத்தை பார்வையிட்டார். மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி, எம்எல்ஏ. பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியது:

மதுரையில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் மக்களிடையே மாற்றத்திற்கான எழுச்சியை கண்கூடாக காண முடிந்தது. 10 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு கூட உருவாக்கப்படவில்லை என்பதால் விரைவான மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

அதிமுக.வின் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாகவே உள்ளன. மதுரையில் எந்த வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை. டிவிஎஸ் நகர், பழங்காநத்தம் இடையேயான பாலத்தை பார்க்கும்போது மக்கள் வரிப்பணம் எப்படி வீணக்கப்பட்டுள்ளது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. 2 பக்கம் முடிந்த பாலம், 3-ம் பக்கத்தில் முடிக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த பாலம் தொடர்பாக வழக்கு இருப்பதால்தான் பணியை முடிக்க முடியவில்லை என முதல்வரே சட்டமன்றத்தில் தவறான தகவல் அளித்துள்ளார். விசாரித்தபோது அப்படி எந்த வழக்கும் இல்லை என தெரிந்துள்ளது.

குளம் தூர்வாரியதாக சொன்னார்கள். அதுவும் செய்யவில்லை. மதுரைக்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டுவர அடிக்கல் நாட்டினர். அதையும் 3 மாதத்தில் செயல்படுத்தமாட்டார்கள்.

வைகை ஆற்றை தேம்ஸ் நதியாக மாற்றுவேன் என்றும், மதுரை மேற்கு தொகுதியை சிட்னியாக மாற்றுவேன் என்றார் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ.

வைகையில் நுரையும், சாயக்கழிவும்தான் கலக்கிறது. அவர் அமைச்சராக செயல்படுவதைவிட, விஞ்ஞானியாக பணியாற்ற வேண்டும் என கருதுவதால் அவரால் எந்த பணியையும் செய்ய முடியாது. இத்தொகுதியில் எதாவது திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் அதை பார்வையிட தயாராக உள்ளேன். மதுரை மட்டுமல்ல, தென் மாவட்டங்களில் எந்த தொழிற்கூடமும் வராததால் வளர்ச்சியை காணமுடியவில்லை.

செய்யாததை செய்வதாகக்கூறி வாக்கு கேட்கின்றனர். தமிழகத்திற்கு எந்த முதலீடும் வரவில்லை. வேலை வாய்ப்பும் உருவாக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் திமுக செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அறிவித்த எந்த திட்டத்தையும் முடித்துத் தரவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா எங்களுக்கு சின்னம்மா இல்லை, அவர்கள்தான் எங்கள் அம்மா என்றனர். இப்போது புதுடெல்லியிலிருந்து என்ன சொல்கிறார்களோ அதை செய்கின்றனர். தரக்குறைவான விமர்சனத்தை வைக்கின்றனர்.

அதிமுக.தான் பாஜக.வின் பி டீமாக இயங்குகிறது. திமுக.விற்கு எந்த பி டீமும் தேவையில்லை. நாங்கள் நேரடியாக அரசியல் செய்யத் தெரிந்தவர்கள்..

திமுக.வில் தற்போதுள்ள கூட்டணி தொடரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் மாற்றம் இருந்தால் கட்சி தலைமைதான் அறிவிக்கும். மு.க.அழகிரி தொடர்பாக கருணாநிதியே ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார்.

அதைத்தாண்டி யாரும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய அவசியம் ஏற்பட்டால் ஸ்டாலின் எடுப்பார். மக்களிடம் ஸ்டாலின் மனுக்களை பெற துவங்கிய பின்னரே போனில் புகார் தெரிவிக்கலாம் என முதல்வர் அறிவிக்கிறார். சுய உதவிக்குழு, நியாயவிலைக்கடை செயல்பாடு என பல்வேறு விசயங்களில் தற்போதைய ஆட்சி மீது பெண்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுகவில் தேர்தல் அறிக்கையும், ஸ்டாலினும் கதாநாயகர்களாக இருப்பர் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x