

நிலக்கோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நிலக்கோட்டை அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த வசந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
”நிலக்கோட்டை தாலுகாவில் 8 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு அக்.12-ல் திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். அதில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும், 2 கி.மீ்ட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
நான் உயர்க் கல்வி பெற்றிருப்பதாகவும், குறிப்பிட்ட கிராம எல்லைக்குள் வசிக்கவில்லை என்றும் கூறி எனக்கு விண்ணப்பம் தர மறுத்துவிட்டனர். இது சட்டவிரோதம்.
எனவே, கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும், ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்து, விதிகளை பின்பற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், 2015ம் ஆண்டின் புதிய திருத்த விதிப்படி கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் சம்பந்தப்பட்ட தாலுகாவிற்குள் வசித்தால் போதுமானது.
இப்புதிய விதிமுறைகளை பின்பற்றாமல் பழைய விதிமுறைகளை பின்பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ”எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து, மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.11-க்கு ஒத்திவைத்தார்.