நெல்லையில் காவல் நிலையம்முன் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

நெல்லையில் காவல் நிலையம்முன் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்
Updated on
1 min read

திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையம்முன் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டுவந்த 4 பேர் ராதாபுரம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

திருநெல்வேலி, தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (50). தேவேந்திரகுல வேளாளர் எழுச்சிச் இயக்க தலைவரான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதில் ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களாக கையெழுத்திட்டு வருகிறார்.

அதன்படி, நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் கையெழுத்திட காரில் சென்றார். காரில் இருந்து இறங்கி காவல் நிலையத்திதுக்குள் செல்ல முயன்றபோது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

காவல் நிலையமுன் 2 வெடி குண்டுகள் விழுந்து வெடித்தன. குண்டு வீச்சில் இருந்து கண்ணபிரானும், அவரது ஆதரவாளர்களும் காயங்களின்றி தப்பினர். சத்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போலீஸார், மர்ம நபர்களை துரத்தினர். ஆனால் அந்த நபர்கள் இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக தச்சநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த பிரவின்ராஜ், ராஜசேகர், விக்ரம், அழகர் ஆகிய 4 பேர் ராதாபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சுசீலா உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in