

சசிகலா இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறார் என்றும் அவருக்கு அதிமுக கொடியைப் பயன்படுத்த உரிமை உள்ளது எனவும் அவரின் வழக்கறிஞர் உறுதியாகத் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா இன்று (பிப்.8) காலை பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை நோக்கிப் புறப்பட்டார். பெங்களுர் நகரில் இருந்து காலை 7.50-க்கு அதிமுக கொடி பொருத்திய காரில் புறப்பட்ட சசிகலா, காலை 10.15 மணிக்குத் தமிழக எல்லை வந்து சேர்ந்தார்.
அங்குக் கூடியிருந்த அமமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், அவருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்து பட்டாசு வெடித்துச் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். இந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் சிலர் அதிமுக கொடிகளையும் ஏந்தி இருந்தனர்.
இதற்கிடையே சசிகலா தமிழக எல்லைக்கு வந்ததும் காரில் இருந்த சசிகலாவிடம், கிருஷ்ணகிரி மாவட்ட ஏடிஎஸ்பி சக்திவேல் நோட்டீஸ் வழங்கினார்.
நோட்டீஸில் காரில் உள்ள அதிமுக கொடி அகற்றப்பட வேண்டும். சசிகலா காருக்குப் பின்னால் 5 கார்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. காரில் உள்ள கொடியை அகற்றச் சிறிது நேரம் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.
அப்பேது சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன், போலீஸ் அதிகாரிகளுடன் பேசும்போது, "சசிகலா இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறார். அவருக்கு அதிமுக கொடியைப் பயன்படுத்த உரிமை உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் காரில் கொடி கட்டக்கூடாது என்று சொல்ல முடியாது. இதை அகற்ற வேண்டும் என்று காவல்துறை சொல்வது சரியில்லை" என்று வாதிட்டார்.
கொடியை அகற்றாமல் தமிழ்நாட்டுக்குள் செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் உறுதியாகக் கூறப்பட்டது. இதனால் சசிகலா உடனடியாக சூளகிரி அதிமுக ஒன்றியச் செயலாளரும் தொழில் அதிபருமான சம்பங்கியின் அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் (TN 35 - 3333) அமர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார்.