Published : 08 Feb 2021 02:26 PM
Last Updated : 08 Feb 2021 02:26 PM

உத்தரகாண்ட் பனிச்சரிவு; தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயார்: முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

உத்தரகாண்ட்டில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இமயமலைப்பகுதியில் உள்ள ஜோஷிமடத்தில் நேற்று (பிப். 07) மிகப்பெரிய அளவில் பனிப்பாறை உடைப்பு ஏற்பட்டு பனிச்சரிவு நிகழ்ந்தது. இதனால், சமோலி மாவட்டத்தில் உள்ள அலாக்நந்தா, ரிஷிகங்கா ஆற்றில் திடீரென கட்டுக்கடங்கா வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதில் ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே 13.2 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் ரிஷிகங்கா மின்திட்டம் (தபோவன் அணை) கட்டப்பட்டு வந்தது.

மிகப்பெரிய அளவில் வந்த வெள்ளத்தில், இந்த மின்திட்டம் முழுமையாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த மின்திட்டத்தில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. இதுவரை 16 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 08) வெளியிட்ட அறிக்கை:

"உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்ததன் காரணமாக சமோலி மாவட்டத்தில் அலாக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் பத்து நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்த துயரச் செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மக்களின் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x