Published : 08 Feb 2021 10:36 AM
Last Updated : 08 Feb 2021 10:36 AM

அரசு போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்கிடுக: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

அரசு போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்கிடவும் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (பிப். 08) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் மக்களின் சாலைப்போக்குவரத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பெரிதும் பயன்படுகிறது. குறிப்பாக, பயணிகள் அரசு பேருந்து போக்குவரத்தில் பயணிப்பதற்கு தேவையான வசதிகளையும், பாதுகாப்பாக பயணம் செய்வதற்கும் இக்கழகங்கள் மேற்கொள்ளும் பணிகள் பாராட்டுக்குரியது. அதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மக்களின் அன்றாடப் போக்குவரத்திற்கு பேருந்துகளை இயக்குவதற்காக அதிகாரிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் என 1 லட்சத்து 40 ஆயிரம் பேரை பணிகளில் ஈடுபடுத்துகிறது.

அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் ஈட்டப்படும் வருவாயானது பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கொடுக்க, பேருந்துகளுக்கு டீசல் நிரப்ப, பேருந்துகளை பராமரிக்க, விபத்துக்கான இழப்பீட்டுத்தொகை கொடுக்க உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கு போதுமானதாக இல்லாமல் குறைவான வருவாயே ஈட்டமுடிகிறது.

அதாவது, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,500 கோடிக்கு மேல் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பணப்பலன்கள் அவ்வப்போதே செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதையெல்லாம் ஈடுசெய்வதற்கு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தில் போதிய நிதிநிலைக்கு வழியில்லை. கடினமான பணியை மேற்கொள்ளும் இரவு, பகல், மழை, வெயில் என பாராமல் உழைக்கும் போக்குவரத்து கழகங்களின் பணியாளர்களுடைய குடும்பங்கள் பொருளாதார சிரமத்தில் தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

குறிப்பாக, அரசு போக்குவரத்துத்துறை பணியாளர்களின் ஊதியம், மின்வாரியம் உள்ளிட்ட பிற அரசுடமை நிறுவன பணியாளர்களின் ஊதியத்தை விட குறைவானது. எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்கிடவும், பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவும், நிதிப்பற்றாக்குறையை போக்குவதற்கும் தமிழக அரசு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும்.

மேலும், போக்குவரத்துத்துறை பணியாளர்களின் குடும்ப நலன் காக்க பிறதுறை பணியாளர்களைப் போன்று ஊதியம் பெறவும், ஓய்வூதியப் பலன்கள் அவ்வப்போதே கிடைத்திடவும், போக்குவரத்துக் கழகங்களின் பணியாளர்கள் அனைவரையும் அரசு பணியாளர்களாக்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அதற்குண்டான அறிவிப்பையும் வெளியிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பணியாளர்கள் வாழ்வு மேம்பட வழிவகுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x