

தமிழக முதல்வராக மீண்டும்பழனிசாமியை அமர்த்துவது தான் பாஜகவின் நோக்கம் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட்ட பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுக்கவில்லை. முறைப்படி அறிவிப்போம் என்றுதான் கூறினோம். அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. பாஜக அதிக இடங்கள் கேட்டு அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. எங்கள் பலம் தெரியும் அதிமுகவுக்கு பாஜகவின் பலமும், பாஜகவுக்கு அதிமுகவின் பலமும் தெரியும். இருவரும் சேர்ந்துதான் கூட்டணியை வழிநடத்துகிறோம். மீண்டும் தமிழக முதல்வராக பழனிசாமியை அமர்த்துவது தான் பாஜகவின் நோக்கம்.
தேர்தலில் போட்டியிடுமாறு கட்சித் தலைமை கூறினால் போட்டியிடுவேன். பிரச்சாரம் செய்யச் சொன்னால் பிரச்சாரம் செய்வேன். பாஜக கொள்கையோடு அதிமுக பெருமளவு ஒருமித்துப் போகிறது. இந்த கூட்டணி நிலைத்து நிற்கும். 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரிக்கவில்லை. குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். அதற்கான காரணத் தையும் அவர் விளக்கமாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.