காஞ்சியில் தொடரும் மழை பாதிப்பு: 8 ஏரிகளில் உடைப்பு, 16 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மூழ்கின

காஞ்சியில் தொடரும் மழை பாதிப்பு: 8 ஏரிகளில் உடைப்பு, 16 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மூழ்கின
Updated on
2 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊத்துக்காடு, நத்தபேட்டை, அல்லாபாத், வையாவூர், களியனூர், புத்தகரம், தென்னேரி, நீஞ்சல் மடுவு ஆகிய 8 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் 20 கிராமங்கள் மற்றும் 16 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்து கடந்த இரண்டு நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது. காஞ்சிபுரம் பகுதியில் மட்டும் நேற்று முன்தினம் 342 மிமீ மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. காஞ்சி நகரத்துக்குள் ஓடும் மஞ்சள்நீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நத்தபேட்டை, அல்லா பாத், வையாவூர் ஏரிகள் நிரம்பி வெளியேறியதால் கரைகள் பலவீன மடைந்து உடைப்பு ஏற்பட்டது.

இதனால் களியனூர், புத்தகரம், தென்னேரி, ஊத்துக்காடு ஆகிய ஏரிகளுக்கு ஒரேநேரத்தில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றது. இதனால், நேற்று ஒரேநாள் இரவில் அந்த ஏரிகள் நிரம்பி உபரி நீர் பாய்ந்ததில் அதன் கரைகளும் உடைப்பு ஏற்பட்டது.

இதில், ஊத்துக்காடு ஏரியில் 30 அடி ஆழம் கொண்ட கரை யைத் தாண்டி வெள்ளம் பெருக் கெடுத்ததால் 40 அடி அகலம் மற்றும் 20 அடி உயரம் கொண்ட கரையில் சுமார் 300 அடி நீளத்துக்கு உடைந்தது. இதனால், அந்த ஏரியிலிருந்து 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேறியதால், அப்பகுதியிலிருந்த சுமார் 18 கிராமங்களைச் சூழ்ந்து வெள்ளநீர் கரைபுரண்டு ஓடியது.

மேலும், வாலாஜாபாத்-வண்ட லூர் 100 அடி சாலையில் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் சென்ற தால், அச்சாலையில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளா கினர். ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர், தென்னேரியிலிருந்து செங்கல்பட்டு நீஞ்சல் மடுவுக்குச் செல்லும் கால்வாயில் பாய்ந்து, பாலாறு மற்றும் களத்தூரான் கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதில் நீஞ்சல் மடுவு ஏரியிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால், செங்கல்பட்டு அருகே திம்மாவரம், மகாலட்சுமி நகர் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடி யாமல் தவிக்கின்றனர். இவர் களை, செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினர் படகில் சென்று பத்திர மாக மீட்டனர்.

இந்த வெள்ளப்பெருக்கால் ஆத்தூர், பாலூர், வில்லியம் பாக்கம், கொளத்தூர், கிதிரிப் பேட்டை பகுதிகளில் பயிரிடப்பட்டி ருந்த 16 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. இது குறித்து ‘தி இந்து’ சார்பில் ஆட்சி யரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து உடைப்பைச் சரி செய்ய அதிகாரி களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து ஊத்துக்காடு விவசாயிகள் கூறும்போது, ‘உடைப்பு ஏற்பட்டுள்ள ஊத்துக் காடு ஏரிகரை, நீர்வள நிலவளத் திட்டத்தில் ரூ.57 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. பணிகளை அதிகாரிகள் முறையாகச் செய்ய வில்லை. கரையைச் சீரமைப்பதாகக் கூறி, அதற்குப் பலமாக இருந்த மரங்களை வேரோடு அகற்றினர். மரங்களை அகற்றிய பகுதியில் சிறிதளவு கூட மண் கொட்டப்பட்டதால் கரை பலவீனமடைந்தது. அதனா லேயே கரை உடைந்தது. கரை உடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டதும், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அதிகாரி களோ கரையில் உடைப்பு ஏற் படாது என அலட்சியமாகப் பதில் அளித்தனர். ஆனால் சுமார் 8 மணிநேரத்தில் கரை உடைந்தது.

ஏரியிலிருந்து அனைத்து நீரும் வெளியேறி வருகிறது. தகவல் அளித்தும் அதிகாரிகள் இங்கு வரவில்லை. தற்போது ‘தி இந்து’வின் முயற்சியால் மாவட்ட ஆட்சியர் ஏரியைப் பார்வையிட்டுக் கரையைப் பலப்படுத்தப் பொதுப் பணித்துறைக்கு உத்தர விட்டுள்ளார்’ என்றனர்.

இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் பெரிய ஏரி, முள்ளிபாக்கம் ஏரியி லும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியதாவது:

மாவட்டத்தில் ஒரேநாளில் 35 செ.மீ., மழைபெய்ததால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் அதிகளவு மழைபெய்ததால் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால், மேற்கூறிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று சீரமைப்பு பணி களை மேற்கொண்டுள்ளனர். ஊத்துக்காடு ஏரி உடைப்பை 6 ஆயிரம் மணல் மூட்டைகளைக் கொண்டு பலப்படுத்துமாறு பொதுப்பணித்துறைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in