Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM

திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களில் போட்டி; சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத் தமிழகத்தில் பிப்.21-ம் தேதி முதல் பிரச்சாரம்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

திமுக கூட்டணியில் கட்சியின் பலத்துக்கேற்ப கூடுதல் இடங்களில் போட்டியிடுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழுகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்துமாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்கள் உட்பட மக்கள் விரோதப்பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறது. மத்திய பட்ஜெட், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலைஉயர்வு மற்றும் வேலையிழப்பு ஆகியவை மக்களை பாதித்துள்ளன. வெள்ளம், புயல் நிவாரண நிதி மறுப்பது உள்ளிட்ட பல வகைகளில் மோடி அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழகம் வஞ்சிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் கடைசி நிமிடம் வரை பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே அதிமுக குறியாக உள்ளது. தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் “அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம், ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆர்த்தெழுவோம்” என்ற இலக்கோடு தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் பிரச்சாரம்

பிப்ரவரி 21-ம் தேதி மார்க்சிஸ்ட் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவை, திருப்பூரிலும் 22-ம் தேதி சேலம், தருமபுரியிலும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் வரும் 26-ம் தேதி சிதம்பரம், நாகப்பட்டினத்திலும், 27-ம் தேதி திண்டுக்கல், மதுரையிலும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் வரும் 27-ம் தேதி திருச்சி, கந்தர்வகோட்டையிலும் 28-ம் தேதி திருநெல்வேலி, நாகர்கோவிலிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி தொகுதி அளவிலான மாநாடுகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பலத்துக்கேற்ப கூடுதலான இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற பணியாற்றுவது, இதனை நிறைவேற்றும் வகையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திப்பது என மார்க்சிஸ்ட் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x