

பொதுப் போக்குவரத்து மூலம் நாடு முழுவதும் 34,500 கி.மீ தூரம் பயணித்து கின்னஸ் சாதனை படைக்கும் பயணத்தை இரு இளைஞர்கள் புதுச்சேரியில் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ரயில் சுற்றுலா தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவர் கோ.வை.திலீபன், சுற்றுலா படிப்பில் முதுநிலை படிப்பு முடித்துள்ள ஜா.ஆடம்சன்ராஜ் இருவரும் இணைந்து, பொது போக்குவரத்து மூலம் நாடு முழுவதும் 34,500 கி.மீ தூரம் பயணித்து கின்னஸ் சாதனை புரிய திட்டமிட்டுள்ளனர். இந்தசாதனை பயணத்தை நேற்று புதுச்சேரியில் இருந்து தொடங்கினர். பேருந்து நிலையத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பல்கலைகழக பேராசிரியர்கள் மற்றும் இந்திய இளைஞர்களின் சங்கம் புதுச்சேரி கிளை சார்பாக துணைத் தலைவர் சரவணன், அவைத் தலைவர் எழிலன் லெபேல், செயலர் சண்முகவேலு, ஒருங்கிணைப்பு செயலர் ஆனந்தராஜன் மற்றும் வேதபுரி கிளையின் பிரேம் ஆனந்த், வேலாயுதம், தேவசேனாதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
இப்பயணத்தின்போது அவர்கள் இந்திய கடலோர காவல்படையின் கொடியை கொண்டு செல்கின்றனர். கரோனாவால் சுற்றுலா முடங்கியுள்ளது. அதனை மீட்டெக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து நெரிசல், காற்றுமாசுவை குறைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக பொதுப்போக்குவரத்து மூலம் இந்தியா முழுவதும் 34,500 கி.மீ தூரம் பயணம் செய்து கின்னஸ் சாதனை புரிய திட்டமிட்டுள்ளனர். புதுச்சேரியில் தொடங்கியுள்ள பயணத்தை 8 விமானங்கள், 34 ரயில்கள், 18 பேருந்துகளில் பயணித்து ஏப்ரல் 17-ம் தேதி ராமநாதபுரத்தில் நிறைவு செய்கின்றனர்.
பயணத்தின்போது இவர்களுக்கு இந்திய இளைஞர் விடுதிகளின் சங்கத்தின் மூலமாக அனைத்து மாநிலத்தி லுள்ள விடுதிகளின் மூலம் சிறப்பான வரவேற்பும், தங்கவும் தேசிய தலைவர் வெங்கட் நாராயணன் ஏற்பாடு செய்துள்ளார்.