Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட தேமுதிக தயார்: பொள்ளாச்சியில் விஜயபிரபாகரன் பேச்சு

தேமுதிக கோவை தெற்கு மாவட்ட தேர்தல் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நேற்றுநடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது: தேமுதிக-அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் உரிய முடிவு ஏற்படாவிட்டால், 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிடவும் தயாராக உள்ளது.

பாஜகவின் சின்னமானதாமரையை கொங்கு மண்டலத்தில் கொண்டுசேர்த்ததில் விஜயகாந்துக்கும் பங்கு உள்ளது. ஜெயலலிதாவுக்குப் பிறகு சட்டப்பேரவையில் வலுவான பெண் தலைவர் இல்லை. அந்தக் குறையைத் தீர்க்க, பிரேமலதாவை சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டிய கடமை ஒவ்வொரு தேமுதிக தொண்டனுக்கும் உள்ளது. தமிழகத்தில் வாரிசு அரசியலைப் பற்றி பேசும் அருகதை யாருக்கும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறையவில்லை அரசியலில் தோல்வி என்பது நிரந்தரம் கிடையாது. சூழல் மாறும்போது தேமுதிக மாபெரும் இயக்கமாகத் திகழும். அதிமுக-தேதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது தேமுதிகவுக்கு எவ்வளவு இடங்கள் கேட்பது என்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். அதிமுக ஆட்சியில் நிறையும் உள்ளது, குறையும் உள்ளது. தற்போது விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ததை தேமுதிக வரவேற்கிறது" என்றார்.

கூட்டத்தில், தேமுதிக கோவை மாவட்டச் செயலாளர் பனப்பட்டி தினகரன், மாநில துணைச் செயலர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x