

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2020 ஜனவரி 1 முதல் 2,614 குற்றவாளிகள் உரிய பிடி ஆணைகளின் உத்தரவுப்படி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்களையும் அவர்களை சார்ந்தவர்களையும், புதிதாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களையும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
3,705 ரவுடிகள் இனி திருந்தி வாழப்போவதாக போலீஸாரிடம் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர். அவர்களின் செயல்பாடுகளை போலீஸார் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். மேலும் நன்னடத்தை பிணை பத்திர உறுதிமொழியை மீறியதாக 120 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்ற நிபந்தனையின்பேரில் பிணையில் வெளியே வந்த குற்றவாளிகள், மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரிகள் மூலம் பிணை ஆணையை ரத்து செய்ய முறையீடு செய்து 158 குற்றவாளிகளின் முன் வழக்குகளில் பெற்ற நீதிமன்ற பிணை ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
1.1.2020 முதல் இதுவரை பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 571 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ரவுடிகள், குற்றவாளிகள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டும், நீதிமன்ற விசாரணை வழக்குகளில்தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் அமைதியை கெடுக்கும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.