

மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளே நாட்டின் பொருளாதார சரிவுக்குக் காரணம் என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
மத்திய பாஜக அரசாலும், மாநில அதிமுக அரசாலும் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்.
மத்திய அரசு தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இனி வரக்கூடிய காலங்களிலும் இந்த சரிவு நிலை மேலும் தொடரும். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், சாதாரண மக்கள் பயனடையும் வகையில் எந்தவொரு அம்சமும் இல்லை. பணக்காரர்கள் எழுதிக்கொடுத்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வாசித்துள்ளார். இந்த பட்ஜெட் மூலம் நாட்டில் விலைவாசிகள் உயரக்கூடும். இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள், என்று பேசினார்.
கூட்டத்தில், மாநில எஸ்.சி பிரிவு துணைத் தலைவர் டாக்டர் செல்வராஜ், நகர் தலைவர் எம்.கணேசன்,
சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.