

தமிழகத்தில் மத அரசியலை நுழைய விடமாட்டோம் என விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார். மாவட்டப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அரவக்குறிச்சி புங்கம்பாடி, பள்ளபட்டி, சின்னதாராபுரம், க.பரமத்தி, வேலாயுதம் பாளையம், கரூர், தாந்தோணி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜியை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால், மாதத்தில் 10 நாட்கள் இங்கேயே தங்கிவிடுகிறேன். படிப்படியாக முன்னேறி முதல்வரானவன் என பழனிசாமி கூறுகிறார். அவர் எப்படி முதல்வரானார் என்பது அனைவருக்கும் தெரியும். இதைக் கூறியதற்கு என் மீது வழக்கு போட்டுள்ளார். நான் மீண்டும் கூறுகிறேன். சசிகலாவின் தயவால் தான் அவர் முதல்வரானார்.
2017-ல் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியபோது நீதிமன்றம் சென்று தடை வாங் கிய முதல்வர் பழனிசாமி, தற்போது தேர்தலுக்காக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள் ளார். ஆர்எஸ்எஸ், பாஜக மத அரசியல் செய்கின்றன. இதற்கு அதிமுக துணை போகிறது. இந்த மத அரசியலை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்றார்.
2-வது நாளாக இன்றும்(பிப்.8) கரூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இந்த பிரச்சாரத்தில், மாநில விவசாய அணிச் செயலாளர் ம.சின்னசாமி, மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், செயலாளர் கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.