

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் எம்.பி அலுவலகத்தை இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர், செய்தியாளர்களி டம் கூறியது: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் குன்னம், அரியலூர், கள்ளக்குறிச்சி உட்பட 6 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். இத்தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி பிரதமர் அலுவலகத்திலும், தமிழக முதல்வரிடமும் பேசியுள்ளேன் என்றார்.
நிகழ்வில், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், மாநில முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச் செல்வன், மாவட்டத் தலைவர் ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, பெரம்பலூர் எம்.பி தொகுதிக்குட்பட்ட முசிறியில் எம்.பி அலுவலகத்தை பாரிவேந் தர் நேற்று திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசும்போது, ‘‘பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், குறைகள் குறித்து இங்கு மனு அளிக்கலாம். அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் புதிய ரயில்வே வழித்தடங்கள் அமைக்குமாறு ரயில்வே அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்’’ என்றார்.