Published : 07 Feb 2021 07:58 PM
Last Updated : 07 Feb 2021 07:58 PM

தமிழகத்தில் பிப்.21 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் 

தமிழகத்தில் பிப்.21 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் நடைபெறவுள்ளது.

"அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம், ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆர்த்தெழுவோம்" என்ற இலக்கோடு தமிழகத்தில் தேர்தல் களம் காணுவது எனவும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கக் கூடிய தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளன.

அதன்படி, கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் - சீத்தாராம் யெச்சூரி, 21.02.2021 - கோவை, திருப்பூர், 22.02.2021 - சேலம், தருமபுரியில் பிரச்சாரம் செய்கிறார்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் - பிரகாஷ் காரத், 26.2.2021 - சிதம்பரம், நாகப்பட்டினம், 27.2.2021 - திண்டுக்கல், மதுரையில் பிரச்சாரம் செய்கிறார்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் - பிருந்தா காரத், 27.2.2021 - திருச்சி, கந்தர்வகோட்டை, 28.2.2021 - திருநெல்வேலி, நாகர்கோவில்
ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பிப்ரவரி 5,6 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆற்ற வேண்டிய அரசியல் கடமைகள் குறித்து விவாதித்து தமிழக வாக்காளர்களுக்கு கீழ்க்கண்ட வேண்டுகோளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது.

மத்தியில் அமைந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வேளாண் திருத்தச் சட்டங்கள் உட்பட மக்கள் விரோதப் பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி வரலாறு காணாத, வீரம் செறிந்த போராட்டத்தினை விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நடத்தி வருகிறார்கள். 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் களப்பலியாகியுள்ளனர். இந்திய நாடு மட்டுமின்றி உலகம் முழுவதிலிமிருந்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர். இப்போராட்டத்தை ஒடுக்க கொடூரமான அடக்குமுறைகளையும், அவதூறுகளையும் மத்திய பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டும் மக்கள் மீதான மேலும் ஒரு தாக்குதலாகவே அமைந்துள்ளது. அனைத்து பொதுத்துறைகளையும் தனியாருக்கு தாரை வார்க்கும் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலைகளை அவ்வப்போது உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இந்திய நாட்டின் வளம் அனைத்தையும் வாரிக் கொடுக்கும் வரைபடமாகவே மத்திய பட்ஜெட்டும் அமைந்துள்ளது.

வேலையிழப்பு அதிகரித்துள்ள நிலையில், இருக்கும் வேலைவாய்ப்பும் பறிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான சிறு-குறு, நடுத்தர தொழில்கள் அழிந்து கொண்டுள்ளன. கொரோனா, பொதுமுடக்க பாதிப்பில் வாழ்விழந்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. விலைவாசி உயர்வை தடுக்க உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாநிலங்களின் உரிமைகளை தட்டிப் பறித்து வருகிறது. இந்தி - சமஸ்கிருத மொழித் திணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. வரி பாக்கி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி, மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை உள்ளிட்ட நிதிகளை வழங்க மறுத்து வருகிறது. தமிழகத்தின் ரயில்வே திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளது. மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கனவாகவே உள்ளது. வெள்ளம், புயல் நிவாரண நிதி மறுப்பது உள்ளிட்டு பல வகைகளில் நரேந்திர மோடி அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

பாஜக தனது மதவெறி அரசியலை தீவிரப்படுத்தி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கியுள்ளது. மதச்சார்பற்ற இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளை தகர்த்து வருகிறது.

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து குரல் கொடுக்க திராணியற்ற அரசாக அதிமுக அரசு திகழ்கிறது. பாஜக அரசின் ஊதுகுழலாகவே நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், வெளியிலும் அதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதைப் பற்றி கவலைப்படாமல் கடைசி நிமிடம் வரை பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக உள்ளது.

பணி நியமனம், கட்டுமான ஒப்பந்தங்கள் என அனைத்திலும் வகை தொகையில்லாமல் லஞ்சமும் - ஊழலும் கொடிகட்டி பறக்கிறது. பெண்கள் - குழந்தைகள் மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வக்கில்லாத அதிமுக அரசு ஜனநாயக உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பொய் வழக்குகள் புனையப்படுகின்றன. காவல் நிலையச் சாவுகள் அதிகரித்துக் கொண்டுள்ளன.

தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை பெருக்க உருப்படியான திட்டங்கள் ஏதுமில்லை. அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தூய்மைப்பணியாளர்கள், செவிலியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, டாஸ்மாக், கூட்டுறவு, ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருகிறது. போராடும் மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் தானடித்த மூப்பாக போராடுபவர்களை கைது செய்வது, சிறையில் அடைப்பது என அராஜகங்கள் தொடர்ந்து வருகின்றன.

தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு போயுள்ளது. ஒட்டுமொத்த கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. அரசு வருமானம் வீழ்ச்சியடைந்து, கடன் வாங்கி தேர்தலுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

11 மருத்துவக் கல்லூரிகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டும் புதிதாக ஒரு மாணவர் சேர்க்கை கூட தொடங்கவில்லை. நீட் தேர்வினால் தமிழக, கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவாக மாறியுள்ளது.

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் - குற்றச்சாட்டுகள், வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் “அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம், ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆர்த்தெழுவோம்” என்ற இலக்கோடு தமிழகத்தில் தேர்தல் களம் காணுவது எனவும் தேர்தல் பரப்புரையை மேற்கொள்வது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கக் கூடிய தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளன.

மேற்கண்ட குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திப்பது என மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த வரலாற்றுக் கடமையினை நிறைவேற்ற தமிழக மக்கள் பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக வாக்காளப் பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x