

போலீஸ் போன்று சீருடைப் பணிகளில் உள்ளவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கைக்கு எதிராக ஒழுங்கீனமாக செயல்படும் போலீஸ்காரர்களைத் தொடர்ந்து பணியில் வைத்திருக்க தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தவர் செந்தில்நாதன். கடந்த 2006-ல் வண்ணார்பேட்டையில் தனியார் தங்கும் விடுதியில் தனிப்படை போலீஸாருடன் தங்கியிருந்தார்.
அந்த விடுதியில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் தனிப்படை போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர் சிவராமன் உயிரிழந்தார்.
இதையடுத்து செந்தில்நாதன் உட்பட பலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் செந்தில்நாதன் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் துறைரீதியான விசாரணைக்கு பிறகு செந்தில்நாதனுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது.
இதை ரத்து செய்யக்கோரி செந்தில்நாதன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் மீதான 5 குற்றச்சாட்டுகளில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத குற்றச்சாட்டு மட்டும் நிரூபமானகியுள்ளது. இதனால் அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் மனுதாரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மனுதாரர் மீதான கொலை வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
கொலை வழக்கில் விடுதலையான நிலையில் துறைரீதியான விசாரணையிலும் தன்னை விடுவிக்க வேண்டும் என மனுதாரர் கேட்பதை ஏற்க முடியாது.
காவல்துறை போன்ற ஒழுக்கம் சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்களின் நடத்தை சரியாக இருக்கும் என அரசு நம்புகிறது. அந்த நம்பிக்கைக்கு எதிராக செயல்படுபவர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மனுதாரர் தன்னுடன் தனிப்படையில் பணிபுரிந்த காவலர் இறந்ததை உயர் அதிகாரிகளக்கு தெரிவித்து இருக்க வேண்டும். அதை தெரிவிக்காமல் மறைத்தது ஒழுக்கம் தவறியதே. இதனால் மனுதாரருக்கு கட்டாய ஒய்வு வழங்கியதில் தலையிட முடியாது.
போலீஸாருக்கு எதிரான வழக்குகளில் சாட்சிகள் பலர் பிறழ்சாட்சிகளாக மாறுகின்றனர். இதனால் வழக்கில் சிக்கிய போலீஸார் விடுதலையாகின்றனர்.
எனவே போலீஸாருக்கு எதிரான வழக்குகளை அருகே உள்ள வேறு மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும். அப்படி செய்தால் தான் போலீஸாருக்கு எதிரான வழக்குகளில் சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறுவது தடுக்கப்படும்.
சாட்சிகள் அச்சம் இல்லாமல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பார்கள். எனவே போலீஸாருக்கு எதிரான வழக்குகளை வேறு மாவட்டங்களுக்கு மாற்றுவது தொடர்பாக மாநகர் காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் ஆணையர்களுக்கு உள்துறை செயலர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.