Last Updated : 07 Feb, 2021 06:56 PM

 

Published : 07 Feb 2021 06:56 PM
Last Updated : 07 Feb 2021 06:56 PM

மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டோம் என அனைவரும் முடிவெடுத்தால் காங்கிரஸ் வருமா?- புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கேள்வி

படவிளக்கம்: என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டுவிழாவில் பேசும் எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி. 

மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அனைவரும் முடிவெடுத்தால் ஆளும் காங்கிரஸ் அரசு வருமா? என ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் 11-ம் ஆண்டு தொடக்க விழா ஈசிஆர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று(பிப். 7) கொண்டாடப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது, ‘‘இந்த ஆண்டு விழாவில் நாம் உறுதியாக ஒரு சபதத்தை ஏற்க வேண்டும். புதுச்சேரியை ஆளுகின்ற திறமையற்ற ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சியை நீக்கிவிட்டு, நம்முடைய ஆட்சியை கொண்டுவர நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும்.

காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் கட்சியை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று நினைக்கின்ற நிலையில் தான் இந்த ஆட்சி இருக்கிறது.

எதைக்கேட்டாலும் எங்களுக்குத் தெரியாது என்கின்றனர். தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றி உள்ளார்களா? அல்லது புதிதாக ஏதேனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்களா? என்றால் இல்லை.

புதுச்சேரியில் நாம் முன்னுதாரணமாக கொண்டு வந்த எத்தனையோ திட்டங்களையாவது சரியாக செய்தார்களா? அதுவும் இல்லை. சட்டப்பேரவை சுற்றிலும் தடுப்புகளை ஏற்படுத்தி மக்களைத் தடுக்கின்றனர்.

இந்த ஆட்சியாளர்களுக்கு ஆளுகின்ற திறமை இல்லை. திட்டங்களை செயல்படுத்த முடியாவிட்டால் விட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? மற்றவர்களை குறைசொல்லியே நான்கரை ஆண்டுகளை கழித்துவிட்டார்கள்.

இந்த ஆட்சியாளர்களால் ஒரு தார்சாலையைக் கூட போட முடியவில்லை. ஹெல்மெட் சட்டம் கட்டாயம் என்று சொன்னார்கள். பிறகு இல்லை என்றார்கள். தற்போது மீண்டும் ஹெல்மெட் சட்டத்தை போட்டு ரூ.1,000 அபராதம் விதித்து மக்களை வஞ்சிக்கின்றனர்.

தமிழகத்தை பார்த்து புதுச்சேரி மக்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் 85 சதவீதம் மக்கள் நலத்திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் என்றும், மற்றொரு புறம் ஆளுநர் அனைத்தையும் தடுப்பதால் எங்களால் எதையும் செய்ய முடியவில்லை என்று மாறுபட்ட பேச்சை முதல்வர் பேசி வருகிறார்.

மாநில அந்தஸ்து வேண்டும் என்று வலியுறுத்தி தொடங்கப்பட்ட கட்சிதான் என்ஆர் காங்கிரஸ். எங்களுடைய ஆட்சியின்போது மாநில அந்தஸ்து கேட்டோம். சட்டப்பேரவையில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினோம். அப்போது கிடைக்காது என்றனர்.

ஆனால் இப்போது உள்ள முதல்வர் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்கிறார். புதுச்சேரி மாநிலத்தில் மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்டு எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. ஆளும் காங்கிரஸ் அரசும் மாநில அந்தஸ்து வேண்டும் என்று வலியுறுத்துவதாக சொல்கின்றனர்.

தற்போது நாம் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவெடுக்கலாம். நமக்கு மாநில அந்தஸ்து, முழு அதிகாரம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று சொல்லலாமே.! அதற்கு ஆளும் காங்கிரஸ் அரசு முன்வருமா?

வெறுமனே போராட்டம் என்று சொல்லி மக்களின் திட்டங்களை செயல்படுத்தாமல் புதுச்சேரியை வீணடித்துவிட்டனர். இதனை மக்கள் தான் மாற்ற வேண்டும். புதுச்சேரியில் உள்ள மக்களுக்கு ஒரு சிறிய பயனும், பலனும் இல்லாத ஆட்சிதான் இப்போது நடந்து கொண்டிக்கிறது.

என்.ஆர்.காங்கிரஸ் மக்களுக்காக உழைக்கின்ற கட்சி. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திய கட்சி. கட்சியில் சிலர் குழப்பங்களை உருவாக்கலாம் என்று நினைக்கின்றனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல். மக்களை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.

அனைத்து பிராந்திய மக்களும் நமக்கு வாக்களிக்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே ஒன்றுமையாக தேர்தலை சந்தித்து அதிக இடங்களில் வெற்றிபெற்று என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிலையில் எண்ணங்களும், உழைப்பும் இருக்க வேண்டும்’’ இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x